வரும் ஆகஸ்ட் 7- ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையைத் தொடங்குகிறது ‘ஆகாஷா ஏர்’ நிறுவனம் (Akasa Air). முதற்கட்டமாக, பெங்களூரு, கொச்சி, அகமதாபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு இரு மார்க்கத்திலும் நேரடி மற்றும் தினசரி விமான சேவையை வழங்கவுள்ளது.
இண்டிகோ விமானம் மீது வேகமாக மோதிய கார்!
அந்த வகையில், வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி முதல் சென்னை மற்றும் மும்பை இடையே நேரடி மற்றும் தினசரி விமான சேவை இரு மார்க்கத்திலும் வழங்கப்படும் என்று ஆகாஷா ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து மும்பைக்கு QP1305 என்ற விமான சேவையையும், மும்பையில் இருந்து சென்னைக்கு QP1304 என்ற விமான சேவையையும் வழங்கவுள்ளது.
அதேபோல், சென்னையில் இருந்து மும்பைக்கு விமான பயணக் கட்டணமாக ரூபாய் 5,015 ஆகவும், மும்பையில் இருந்து சென்னைக்கு விமானப் பயணக் கட்டணமாக ரூபாய் 4,915 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.akasaair.com/ என்ற ஆகாஷா ஏர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.