44வது செஸ் ஒலிம்பியாட்: சென்னைக்கு வந்த வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு!

Photo: TN DIPR Official Twitter Page

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் (44th Chess Olympiad) போட்டியில் பங்கேற்க 185- க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க, இரண்டு துறைச் சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் இணைந்து தன்னார்வலர்களும் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சிரமமின்றி விடுதிக்கு செல்ல வழிகாட்டுகின்றன.

இந்திய நாட்டின் 15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார் திரௌபதி முர்மு!

வீரர்களின் போக்குவரத்துக்காக 100- க்கும் மேற்பட்ட பேருந்துகள், 100- க்கும் மேற்பட்ட கார்கள் இயக்கப்படுகின்றன. தமிழக அரசின் இத்தகைய ஏற்பாட்டைப் பாராட்டியுள்ள வெளிநாட்டு வீரர்கள், இதுபோன்ற வரவேற்பை எங்கும் பார்த்ததில்லை என்று கூறியுள்ளனர்.

இதனிடையே, செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி இன்று (28/07/2022) சென்னை வருகிறார். இரண்டு நாள் பயணமாக, பிரதமர் சென்னை வருவதையொட்டி, பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

Photo: TN DIPR Official Twitter Page

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (28/07/2022) மாலை நடைபெறும் விழாவில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மாமல்லபுரம் வண்ணமின் விளக்குகளால் ஜொலிக்கிறது. அத்துடன், ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போட்டி நடைபெறும் இடங்கள், வெளிநாட்டு வீரர்கள் தங்கும் தனியார் விடுதிகளில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி, கோலாலம்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

இன்று (28/07/2022) தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், வரும் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், சுமார் 1,000- க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.