ஏர் இந்தியா விமானத்தில் வரும் இந்தியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய கட்டுப்பாடு

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானத்தில் வரும் இந்தியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் முயற்சியாக ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதேபோல, தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொது சிவில் விமான ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, ‘விமானங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணிகளை சிறப்பு விமானங்களில் அனுப்புவது அனுமதிக்கப்பட மாட்டாது.

இந்தியாவை சேர்ந்த அனைத்து பயணிகளும் உரிய வசிப்பிட அனுமதி அல்லது பணி அனுமதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் அல்லது துபாயின் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான இயக்குநரகத்தின் ஒப்புதல் பெற்றிருந்தாலும்,

தற்போது டில்லியில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் மற்றும் எமிரேட்ஸில் உள்ள வெளிநாட்டினர் விவகாரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தின் சிறப்பு அனுமதியை பெற்றால் மட்டுமே வந்தே பாரத் திட்டத்தின் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்’ என கூறப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி தன்னுடைய எல்லைகளை மூடிய துபாய், வரும் ஜூலை 7ம் தேதி முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட உள்ளது. அனைத்து சுற்றுலா பயணிகளும் கொரோனா தொற்று இல்லை என்பதற்காக சான்றிதழை பெற்று வர வேண்டும் அல்லது வருகையின்போது பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.