உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை உலகளவில் 43 லட்சத்து 54 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோநா எதிர்ப்பு போராட்டம் இன்னும் மாதங்கள் அல்லது ஆண்டுகள் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 16 லட்சம் பேர். அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 14 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.சுமார் 83 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் தான் இதன் பாதிப்பு அதிகம்.
அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான ரஷ்யாவில், வைரஸ் மளமளவென பரவி, பாதிப்பு பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது .
ரஷ்யாவில் இதுவரை 2 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக, அந்நாட்டில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது .
இது போலவே கொரோனா பாதிப்பு பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள பிரிட்டனில் இதுவரை 32 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் கொரோனா பாதிப்பில் இந்தியா சீனாவை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன், “மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தி இறப்பு விகிதத்தையும் குறைத்து இருப்பது பாராட்டத்தக்கது.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் அரசு அதிகாரிகள் சிறப்பான நடவடிக்கை எடுத்ததை பாராட்டுகிறேன். உலக நாடுகள் அனைத்தும் இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர போராடி வருகின்றன.
இதற்கு இன்னும் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகலாம், அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். உண்மையில் இந்தியாவில் பொது சுகாதார பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்களை வலுப்படுத்துவதற்கான நேரம் இது.
தடுப்பூசி கண்டுபிடிப்பில் இந்தியா எப்போதும் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியா பங்குபெறவில்லை என்றால் உலகில் போதுமான தடுப்பூசிகள் கிடைத்திருக்காது. ஒரு தடுப்புசி கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்குப் பின் பயன்பாட்டிற்கு வர 10 ஆண்டுகள் ஆகும், ஆனால் எபோலா வைரஸுக்கு ஐந்து ஆண்டுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் கொரோனாவுக்கு ஓராண்டுக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்க முயற்சிக்கப்படுகிறது.
இதற்கு தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தடுப்பூசி உருவாக்கி பரிசோதிப்பது மட்டும் போதாது அதை உற்பத்தி செய்வதும் மதிப்பீடு செய்து கொள்முதல் செய்வதும் மக்களுக்கு தடுப்பூசிகள் போடுவதற்கான சுகாதார கட்டமைப்புகளை பெறுவதும், மிக முக்கியமானது என எம்எஸ் சுவாமிநாதன் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும். உலகச் சுகாதார அமைப்பின் தகவலின்படி இந்த வைரஸால் 215 நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” எனறு அவர் கூறினார்.