“இந்தியாவில் 9 மாதத்தில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும்” : ஐக்கிய நாடுகள் சபை கணிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக உலகில் பல இடங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் அடுத்த 9 மாதங்களில் குழந்தை பிறப்பு அதிகமாகும் என்று ஐ.நா.சபை கணித்துள்ளது.

இதுபற்றி ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்: கொரோனா கட்டுப்படுத்த உலகெங்கும் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடைப்பதால், அடுத்த 9 மாதங்களில் உலகம் முழுவதும் 11.6 கோடி குழந்தைகள் பிறக்கும் எனத் தெரிகிறது. இந்தியாவில் 2.01 கோடி குழந்தைகளும் சீனாவில் 1.35 கோடி குழந்தைகளும் பிறக்கலாம் எனத் தெரிகிறது.

அதே நேரம் பாகிஸ்தானில் 50 லட்சம், நைஜீரியாவில் 64 லட்சம், இந்தோனேசியாவில் 40 லட்சம் குழந்தைகள் பிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா பிரச்சனை நீடித்து வருவதால், பிறக்கும் குழந்தைகளுக்கும், அவற்றை பெறப்போகும் தாய்மார்களும் சுகாதார நலன்களில் குறைபாடு ஏற்படலாம், என்று ஐ.நா.சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனை பற்றி யுனிசெஃப் செயல் இயக்குநர் ஹென்ரீட்டா போர் கூறுகையில்,”கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வளரும் நாடுகளில் கர்ப்பிணிகளுக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கும் சுகாதார சேவை அளிப்பதில் சிக்கல் ஏற்படும்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து இந்திய ஆர்த்ரிட்டிஸ் (மூட்டுநோய்) பவுண்டேஷன் தலைவரும்,பொது சுகாதார நல நிபுணருமான டாக்டர் சுஷில் சர்மா கூறுகையில், “கொரோனா ஊரடங்கு காலத்தில் பச்சிளம் குழந்தைகள் பிறக்கும் போது இறப்பு விகிதமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நாட்களில் கர்ப்பத்தடை சாதனங்கள் தடைபடுவதால் காரணத்தினால் நிறைய பெண்கள் கர்ப்பமடைய வாய்ப்புள்ளது. இதற்கிடையில் குழந்தைப் பிறப்பைக் கட்டுப்படுத்தும் முறைகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.