இந்தியாவில் ஏப்ரல் 15 முதல் வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் – முன்பதிவு தொடங்கியது

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வருகின்ற ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் வெளியூர், வெளிநாடு செல்வதற்கான ரயில், விமான முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது 9 நாட்கள் கடந்துள்ள நிலையில் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் 144 தடை உத்தரவு முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் அனைத்து வகையான போக்குவரத்துக்களும் இயங்க வாய்ப்பு உள்ளதால் வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கான ரயில், விமானம், பேருந்து ஆகியவற்றின் முன்பதிவு நேற்று(02.04.2020) காலை 10 மணிக்கு தொடங்கியது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகத்தான் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ரயில், விமான முன்பதிவு தொடங்கி உள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினாலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் முன்பதிவு ஒருசில மணி நேரங்களிலேயே முடிவடைந்து உள்ளது. மேலும் ஏற்கனவே முன்பதிவு செய்து ரத்தான ரயில் டிக்கெட்களுக்கான முழு தொகையும் அவரது சேமிப்பு கணக்குகளுக்கு திரும்பி செலுத்தப்படும் என ஏற்கனவே ரயில்வே துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.