தேசிய ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும்: பல மாநிலங்கள் கோரிக்கை

கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கு தேசிய அளவிலான ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பதற்கு பெரும்பாலான மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதையடுத்து, ஏப்ரல் 14-ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

தேசிய அளவிலான ஊரடங்கு வரும் ஏப்ரல் 14 முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து சுகாதாரத் துறை உள்பட பல்வேறு தரப்பினரிடம் மத்திய அரசு கருத்து கேட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மாநில அரசுகளின் கருத்தை அறிவதற்காக, மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி தில்லியில் இருந்தபடி காணொலி வாயிலாக சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

காலை 11 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தில், உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அனைவரும் இடைவெளி விட்டு அமா்ந்திருந்தனா். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிச்சாமி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா், தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் உள்ளிட்டோா் மாநிலத் தலைநகரங்களில் இருந்து பங்கேற்றனா்.

அப்போது, தேசிய அளவிலான ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பஞ்சாப், தில்லி, மேற்கு வங்க மாநில முதல்வா்கள் உள்பட பெரும்பாலான மாநில முதல்வா்கள் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அரசின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேசிய அளவிலான ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் பெரும்பாலான மாநில முதல்வா்கள் கோரிக்கை விடுத்தனா். அவா்களின் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்றாா் அவா். இதுதொடா்பாக ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.