தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தின் போதான் நகரை சேர்ந்தவர் ரஜியா பேகம். 48 வயதான அவர், போதான் மண்டல் பரிஷாத் டெரிடோரியல் காஸ்டியன்ஸி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இரு மகன்கள் உள்ளனர்.
இரண்டாவது மகன் நிஜாமுதீன் நெல்லூரில் உள்ள நாராயணா மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறார். நிஜாமுதீன், தன நண்பனின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று அவருடன் நெல்லூரிலுள்ள ரெஹ்மதாபாத்திற்கு சென்றுள்ளார்.
மார்ச் 12ம் தேதி நெல்லூருக்கு ரயிலில் சென்ற நிஜாமுதீன் மார்ச் 23ம் தேதிக்கு தன்னுடைய ரிட்டர்ன் டிக்கட்டை புக் செய்துள்ளார். ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவரால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. சில முயற்சிகள் மேற்கொண்டும் அது தோல்வியில் முடிவடைந்தது.
ரஜியா பேகம் தன்னுடைய மகனை வீட்டுக்கு கொண்டு வருவதற்காக போதானின் ஏ.சி.பி. ஜெய்பால் ரெட்டியிடம் இரண்டு முறை ஆலோசனைகளை பெற்றிருக்கிறார். ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என அறிந்த ரஜியா, கடந்த ஏப்ரல் 5ம் தேதி அன்று யாரிடமும் சொல்லாமல் தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தையும், பெட்ரோல் நிரப்புவதற்கு கேன்-ஐயும், சாப்பிட சப்பாத்தி மற்றும் சப்ஜியுடன் கிளம்பியுள்ளார்.
“ஐதராபாத் எனக்கு எப்போது பயம் இல்லை. என்னுடைய கணவரை டையாலிசிஸ் சிகிச்சைக்காக நான் இரு சக்கர வாகனத்தில் தான் அழைத்து செல்வேன். 25 வருடங்களாக நான் இரு சக்கர வாகனம் ஓட்டி வருகிறேன். 14 வருடத்திற்கு முன்பு என் கணவனை இழந்துவிட்டேன்” என்று அவர் கூறுகிறார்.
ஐதராபாத்தை கடந்த பின், தூப்ரான் வந்து தன்னுடைய மகனுக்கு அழைப்பு விடுத்து இவ்வாறாக தான் நெல்லூர் நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இடையில் பெட்ரோல் பங்குகளில் 15-20 நிமிடம் வரை ஓய்வெடுத்து பயணம் செய்துள்ளார். ஆந்திரா – தெலுங்கானா எல்லையை அடைந்த போது காவல்துறையினர் அவரை நிறுத்தி விவரம் கேட்க தன்னுடைய கதையை கூறியுள்ளார்.
அவருடைய பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்று அவருக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளனர் காவல்துறையினர். பின்னர் எல்லையில் இருந்து மாலை துவங்கி அதிகாலை 2 மணி வரை தொடர்ந்து பயணித்துள்ளார். இறுதியாக நெல்லூருக்கு வெளியே இருக்கும் சோதனைச்சாவடியில், “இந்த நேரத்தில் தனியாக செல்ல வேண்டாம். கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு பொழுது புலரும் போது செல்லுங்கள்” என்று அறிவுரை கூறியுள்ளது ஆந்திரா காவல்துறை.
பின்னர் காலை 4 மணி அளவில் நெல்லூரை நோக்கி கிளம்பிய ரஜியா, 07:30 மணிக்கு தன்னுடைய மகனை பார்த்துள்ளார். பிறகு 7ம் தேதி அன்று மதியமாக கிளம்பிய அவர்கள், 8ம் தேதி மாலை போதான் திரும்பியுள்ளனர்.
இதுபற்றி போதானின் ஏ.சி.பி. ஜெய்பால் ரெட்டி, “மிகவும் தைரியமான பெண் தான் அவர். அவரிடம் நான் கார் ஒன்றை வாடகைக்கு வைத்து கொள்ளலாமே என்று கேட்டதிற்கு என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். மேலும் செக் போஸ்ட்டில் நிறுத்தி கேள்வி கேட்டால் பதில் சொல்லும் வகையில் உங்களின் கடிதம் ஒன்றை கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொண்டு சென்றார். அவருடைய தைரியம் தான் அவரின் மகனை மீட்டுள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.