இன்று முதல் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்புவார்கள் – விமானங்கள் தயார்!

இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து!
இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து!

கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் விமானம் உட்பட எந்த ஒரு போக்குவரத்து சேவைகளும் நடைபெறவில்லை. இதற்கிடையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இன்று (மே 7) வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தியர்களுக்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் தயார் நிலையில் உள்ளன. இது தொடர்பாக நேற்று (மே 6) வெளியுறவுத்துறை அமைச்சகம் சிறப்பு கூட்டங்களை நடத்தியது. ஏர் இந்தியாவின் ஒரு விமானம் அபுதாபியில் இருந்து 200 குடிமக்களுடன் இன்று இந்தியாவுக்கு வருகிறது.

“வந்தே பாரத் மிஷன்” என்ற இந்த திட்டத்திற்காக வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா பல மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த திட்டத்தின் படி இன்று முதல் பல்வேறு நாடுகளுக்கு பல விமானங்களை இந்தியா அனுப்ப தொடங்கும்.

 

இந்த பணியை செயல்படுத்துவதை வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கண்காணித்து வருகிறார். மேலும் இந்த விவகாரத்தில் சுகாதார அமைச்சகம், சிவில் விமான போக்குவரத்து, உள்துறை அமைச்சகம் மற்றும் மாநிலங்களின் பிரதிநிதிகள் என பல அமைப்புகளுடன் கூட்டங்களை நடத்தியுள்ளார். இந்த பணி தொடர்பாக பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிகாரிகளை வெளியுறவு அமைச்சகம் நியமித்துள்ளது.

குறிப்பிட்ட விமான நிலையங்களில் பயணிகளுக்கேற்ப வசதிகளும் முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 200 பயணிகளுடன் காலை 9.30 மணிக்கு அபுதாபியில் இருந்து கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு முதல் விமானம் வர உள்ளது. டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல விமான நிலையங்களில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தரையிறங்க உள்ளனர்.

மலேசியா, பிரிட்டன் முதல் அமெரிக்கா வரை உலக நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் திரும்புவார்கள். இதற்காக ஏர் இந்தியா முதல் கட்டமாக மே 13-ம் தேதி, 12 நாடுகளில் இருந்து 15,000 இந்தியர்களை சுமார் 64 விமானங்கள் மூலம் தாயகம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

முதல் நாளில் வெளிநாடுகளில் இருந்து 10 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. வியாழக்கிழமை கொச்சியைத் தவிர, கோழிக்கோடு, டெல்லி, மும்பை, அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் ஸ்ரீநகர் போன்ற நகரங்களில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் விமானம் மூலம் வந்தடைவார்கள்.