உலக நாடுகளில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா 12-ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது.
உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. நேற்று ஒருநாளில் மட்டும் அமெரிக்காவில் 22,802 பேருக்கும், ரஷ்யாவில் 10,899 பேருக்கும், பிரேசிலில் 8,459 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில் கொரோனா ஒருநாள் பாதிப்பில் இந்தியா 4-ஆம் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் மட்டும் 3,524 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் 3,403 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,08,073 ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்து ஸ்பெயின் (2,69,520), ரஷ்யா (2,32,243), இங்கிலாந்து (2,26,463), இத்தாலி (2,21,216) என கொரோனா பாதிப்பில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இவ்வாறு கொரோனா பாதிப்பில் இந்தியா 75 ஆயிரத்தை நெருங்கி 12-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவுக்கு முன்னதாக 11-வது இடத்தில் உள்ள சீனா கொரோனாவின் பாதிப்பில் 82,919 ஆக உள்ளது. இந்தியாவுக்கு அடுத்ததாக 13-வது இடத்தில் இருக்கும் பெரு கொரோனாவின் பாதிப்பில் 72,059 ஆகவும் இருக்கிறது.
அமெரிக்காவில் மரணங்கள் 85 ஆயிரத்தை நெருங்குகின்றது. நேற்று ஒரு நாளில் மட்டும் 1,573 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,368 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்த இடங்களில் இருக்கும் இங்கிலாந்தில் 32,692 பேரும், இத்தாலியில் 30,911 பேரும், பிரான்ஸில் 26,991 பேரும், ஸ்பெயினில் 26,920 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.