மத்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமை இருக்கிறது. இந்திய விமானச் சந்தையில் நிலவும் கடுமையான போட்டியாலும், விமான எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளாலும் கடந்த பல ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடியில் ஏர் இந்தியா தவித்து வருகிறது.
தனது ஊழியர்களுக்கான சம்பளத்தைக் கூட கொடுக்க முடியாமல் தவித்து வரும் ஏர் இந்தியா, சம்பளக் குறைப்பு, பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. இதுபோன்ற சூழலில்தான் ஏர் இந்தியாவின் பங்குகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விற்பனை செய்து நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது.
முதலில் ஏர் இந்தியாவின் 76 சதவீதப் பங்குகளை மட்டும் தனியாருக்கு விற்பனை செய்வதற்கான அறிவிப்பு வெளியானபோது, அதன் பங்குகளை வாங்க எவரும் முன்வரவில்லை. பின்னர் வேறு வழியின்றி ஏர் இந்தியாவின் 100 சதவீதப் பங்குகளையும் தனியாருக்குத் தாரை வார்க்க முடிவுசெய்யப்பட்டது.
அதற்குச் சில சலுகைகளையும் அறிவித்தது மத்திய அரசு. ஏர் இந்தியாவை வாங்க விரும்பும் நிறுவனங்கள் மார்ச் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதுபோன்ற சூழலில்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு தொடங்கியது. கொரோனாவால் ஏர் இந்தியாவின் பங்கு விற்பனைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30 வரையில் வழங்கப்பட்டது.
தற்போதைய சூழலில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஏர் இந்தியா விற்பனைக்கான கால அவகாசம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று (ஏப்ரல் 28) அறிவித்துள்ளது.
மே 30ஆம் தேதி வரையில் ஏர் இந்தியாவின் பங்கு விற்பனைக்கு விண்ணப்பிக்கலாம். ஜனவரி 27ஆம் தேதி பங்கு விற்பனைக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து இதுவரையில் இரண்டாவது முறையாகக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, என்று புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலவும் இந்த சூழலில் எந்தவொரு நிறுவனமும் ஏர் இந்தியாவை வாங்க முன்வராது என்று கருதப்படுகிறது. கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பினால்தான் ஏர் இந்தியா விற்பனைக்கான வாய்ப்பு எளிதாகும் எனவும் கருதப்படுகிறது.