இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி உத்தரவு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. கொரோனா தொற்று இன்னும் குறையாத காரணத்தால் ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் பிரதமருக்கு வலியுறுத்தினர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணிக்கு உரையாற்றினார்.

அதில், மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவித்தார். தொழிற்சாலைகள் சிலவற்றை மீண்டும் இயக்குவதற்கான அனுமதி மற்றும் தளர்வுகள் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அதுகுறித்து ஏதும் சொல்லவில்லை.

ஆனால், ஏப்ரல் 20ஆம் தேதிவரை கடுமையான விதிகள் கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்த பிரதமர், 20ஆம் தேதிக்குப் பிறகு சில நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இத்துடன், நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்களிடம் ஒரு 7 கோரிக்கைகளை முன் வைத்தார் பிரதமர் மோடி.
அவை:
1. பெரியவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
2. சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள்.
3. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுங்கள்.
4. ஆரோக்ய சேது செயலியைப் பயன்படுத்துங்கள்.
5. எளியவர்களுக்கும், தேவை இருப்பவர்களுக்கும் உதவுங்கள்.
6. உங்கள் பணியாட்களை வேலையை விட்டு நிறுத்தாதீர்கள்.
7. கொரோனா போரில் ஈடுபடுவோரை மதியுங்கள் (சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், இன்னும் பல)

என்று பிரதமர் நரேந்திர மோடி இன்றைய உரையில் கூறினார்.