1500 பேருக்கு ஒரேநேரத்தில் விருந்து..! கொரோனா பரவியிருக்குமா..? அதிரும் ம.பி.!!

உலகெங்கும் நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்குதல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. என்னதான் இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் இன்னும்கூட விழிப்புணர்வின்றி மக்கள் இயல்பாக நடமாடுகிறார்கள். இப்படி விழிப்புணர்வு இல்லாமல் செய்த காரியத்தால் 1500 பேருக்கு கொரோனா தொற்றியிருக்குமோ என்று மத்தியப்பிரதேசத்தில் அச்சம் நிலவிக்கொண்டிருக்கிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக பலரும் சொந்த நாடுகளுக்குத் திரும்பிய நிலையில், துபாய் ஹோட்டலில் பணியாற்றி வந்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் சுரேஷ், கடந்த மார்ச் 14-ஆம் தேதி தனது சொந்த ஊரான மத்தியப்பிரதேச மாநிலம் மோரினாவுக்கு வந்துள்ளார்.

சுரேஷின் தாயாருக்கு மார்ச் 20-ஆம் தேதி நினைவுநாள் என்பதால், அன்று 1,500 பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்திருக்கிறார். கொரோனா சுற்றித்திரியும் சூழலில், வந்தவர்களும் எந்த கட்டுப்பாடும் இன்றி ஒன்றாகக் கூடி உணவருந்தியுள்ளனர்.

இந்நிலையில், மார்ச் 23-ம் தேதி சுரேஷுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா இருப்பதும் உறுதிசெய்யப்பட்டது. அதனால் கடந்த 20 நாட்களில் அவர் யாரையெல்லாம் தொடர்புக்கொண்டார் என்று விசாரிக்கும் போது, கடந்த மார்ச் 20-ஆம் தேதி 1500 பேருக்கு அவர் விருந்து வழங்கியது தெரியவந்தது.

இந்த நிலையில் சுரேஷின் நெருங்கிய உறவினர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொண்டபோது 23 பேரில் 10 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்ற 13 பேரும் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் அவ்விருந்தில் கலந்துகொண்ட அனைவரும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டுமென அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மத்தியபிரதேசத்தில் ஏற்கனவே 103 பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்கும் நிலையில், இந்த 1,500 பேரும் பரிசோதிக்கப்பட்டால் இன்னும் எண்ணிக்கை அதிகமாகும் என அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்தியப் பிரதேசத்தின் உயர் மருத்துவ அலுவலர் ஒருவர் வழங்கியுள்ள பேட்டியில்,”துபாயிலிருந்து கிளம்பியபோது சுரேஷுக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. ஆனாலும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் 1500 பேரை ஒன்றுகூட்டி விருந்து கொடுத்தது மிகவும் தவறானது. மக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு கொடுத்துக்கொண்டுதான் வருகிறோம். அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்காதவரை கொரோனாவை நாட்டிலிருந்து விரட்ட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.