இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் கொரோனா பரவுவது குறையவில்லை. அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 767 ஆகவும், உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 4,337 ஆகவும் இருந்தது.
புதிதாக 6,566 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 ஆக உயர்ந்து இருக்கிறது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 194 பேர் உயிர் இழந்து உள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,337-ல் இருந்து 4,531 ஆக அதிகரித்து இருக்கிறது.
இதற்கிடையே ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களால் கொரோனா பரவும் ஆபத்து இருப்பதால் அவர்கள் அங்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறார்கள். இதேபோல் வெளிநாடுகளில் இருந்து ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் விமானங்களில் அழைத்து வரப்படும் இந்தியர்களும் தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் இந்தியா முழுவதும் இதுவரை சுமார் 23 லட்சம் பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
“கடந்த புதன்கிழமை வரை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 91 லட்சம் பேர் ரயில், பஸ்கள் மூலம் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ், 40 நாடுகளில் இருந்து 30 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள். மேலும் 60 நாடுகளில் இருந்து 1 லட்சம் பேர் அழைத்து வரப்பட இருக்கிறார்கள். இப்படி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சென்றவர்களும், வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களும் அரசு ஏற்பாடு செய்துள்ள இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 26-ந் தேதி நிலவரப்படி, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 22 லட்சத்து 81 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். 14-ந் தேதி நிலவரப்படி 11 லட்சத்து 95 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். 12 நாட்களில் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகி இருக்கிறது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 லட்சத்து 2 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிரா, தனிமைப்படுத்துதலிலும் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள குஜராத்தில் 4 லட்சத்து 42 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பொறுத்தமட்டில், பல்வேறு மாநிலங்களில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு திரும்பிய 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வீடுகளுக்கு சென்று தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். பீகாரில் 2 லட்சத்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தில் 1 லட்சத்து 86 ஆயிரம் பேரும், ஒடிசாவில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேரும், ஜார்கண்டில் 88 ஆயிரத்து 536 பேரும், பஞ்சாபில் 37 ஆயிரத்து 618 பேரும், காஷ்மீரில் 30 ஆயிரத்து 983 பேரும், இமாசலபிரதேசத்தில் 25 ஆயிரத்து 238 பேரும், ராஜஸ்தானில் 19 ஆயிரத்து 418 பேரும், ஆந்திராவில் 14 ஆயிரத்து 930 பேரும், அசாமில் 13 ஆயிரத்து 941 பேரும், யூனியன் பிரதேசமான லடாக்கில் 13 ஆயிரத்து 538 பேரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 14-ந் தேதி நிலவரப்படி மராட்டியத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேரும், குஜராத்தில் 2 லட்சம் பேரும், உத்தரபிரதேசத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேரும், பீகாரில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேரும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை மிகவும் அதிகரித்து இருக்கிறது.
கடந்த 14-ந் தேதி வரை இப்படி தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களில் லட்சக்கணக்கான பேர் 7 அல்லது 14 நாட்கள், தனிமைப்படுத்துதலை முடித்து வீடு திரும்பி இருக்கிறர்கள்” என்று அந்த அதிகாரி கூறினார்.