“சர்வதேச விமான சேவையை மற்ற நாடுகள் துவக்கினால் இந்தியாவும் துவக்கும்” என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் நாட்டில் சர்வதேச விமான சேவை நிறுத்தப் பட்டுள்ளது. உள்ளூர் விமான சேவைகள் குறிப்பிட்ட அளவில் கடந்த 1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது, “சர்வதேச விமான சேவையை மற்ற நாடுகள் துவக்கினால் இந்தியாவும் துவக்கும். இப்போது உள்ளூர் விமான சேவைக்கு 700 விமானங்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.
வைரஸ் பரவலால் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் பரிதவித்த இந்தியர்களை தாயகம் அழைத்து வர ‘வந்தே பாரத்’ திட்டம் துவக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 9,203 பேர் தாயகம் அழைத்து வரப் பட்டுள்ளனர். ‘உடான்’ திட்டத்தின் கீழ் 588 விமானங்கள் மூலம் 1,928 டன் மருத்துவ பொருட்கள் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.