கேலிக்கும், கிண்டலுக்கும் மத்தியில் தமிழ் மகனுக்கு கிடைத்த வெற்றி! – முயற்சி வீண் போகவில்லை

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று முன்தினம் (செப்.7) அதிகாலை 1.30 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதையடுத்து, சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்ல தொடங்கியது.

400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடத்தை தேர்வு செய்து தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எவ்வித சிக்னலும் வரவில்லை எனவும், 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.

இந்நிலையில், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ANI செய்தி நிறுவனத்திடம் அவர் கூறுகையில், “சந்திர மேற்பரப்பில் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம், ஆர்பிட்டர் லேண்டரின் தெர்மல் படத்தைக் கிளிக் செய்துள்ளது. ஆனால் இதுவரை தகவல் தொடர்பு இல்லை. நாங்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம். அதுகுறித்து விரைவில் தெரிவிக்கப்படும்,” என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக, நேற்றுமுன்தினம் தூர்தர்ஷனுக்கு சிவன் அளித்த பேட்டியில், “அடுத்த 14 நாட்களுக்கு விக்ரம் லேண்டர் மீண்டும் சிக்னல் இணைப்பை பெற முயற்சிப்போம். மொத்தத்தில், சந்திரயான் 2 பணி 100% வெற்றிக்கு மிக அருகில் உள்ளது. அறிவியலில் முடிவுகளை தேடக்கூடாது. மீண்டும் மீண்டும் நடத்தும் சோதனைகளே முடிவுக்கு அழைத்துச்செல்லும். சந்திரயான் -2 திட்டத்தில் 90-95 சதவிகித இலக்குகள் எட்டப்பட்டுவிட்டது. சந்திரயான்-2 திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும் சந்திரன் தொடர்பான ஆய்வுகளில் முனைப்பு காட்டுவோம்.

பூமியைச் சுற்றி துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டு வரும் ஆர்பிட்டார் 7.5 ஆண்டுகள் வேலை செய்யும். ஆர்பிட்டரின் நியமிக்கப்பட்ட ஆயுட்காலம் ஒரு வருடம் மட்டுமே. ஆனால் கூடுதல் எரிபொருள் ஆர்பிட்டரில் கிடைப்பதால், ஆர்பிட்டரின் ஆயுள் ஏழரை ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆர்பிட்டாரின் அதிதுல்லிய கேமரா அனுப்ப உள்ள படங்கள் சர்வதேச அளவிலான ஆய்வுக்கு உதவும்.

2019 ல் ககன்யான் திட்டத்திற்காக முழுமையாக தயாராகி வருகிறோம். பிரதமர் மோடி எங்களுக்கு ஊக்கம், ஆதரவு தரும் சக்தியாக உள்ளார். விக்ரம் லேண்டரிடம் இருந்து இழந்த சமிக்ஞையை மீண்டும் உயிர்ப்பிக்க தேவையான முயற்சிகள் நடந்து வருகின்றன” என்று சிவன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழரான சிவன் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து அவரது சீரிய பணி பலரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது. விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட போது, கண் கலங்கிய சிவன் தழுதழுத்த குரலில் ‘தொடர்பு துண்டிக்கப்பட்டது’ என்று அறிவித்தார். பெங்களூரு விண்வெளி மையத்தில் இருந்து பிரதமர் மோடி விடைபெற்ற போது, சிவன் கண்ணீர் விட்டு அழுததை எவரும் மறக்க முடியாது.

இந்தியாவின் பின்னடைவை சில பாகிஸ்தான் சமூக வாசிகளும் கிண்டல் செய்து கொண்டிருக்க, சில நாடுகள் சந்திரயான் 2 தடுமாற்றத்தை உள்ளூர கொண்டாடி வருகின்றன. ஏனெனில், மிகக் குறைந்த பட்ஜெட்டில் நிலவின் தென் துருவ பகுதியை இந்தியா ஆய்வு செய்துவிட்டால், அது மற்ற நாடுகளின் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவால் அளிக்கக் கூடிய ஒன்றாகிவிடும். இந்த நிலையில் தான் விக்ரம் லேண்டரின் இருப்பிடம் தற்போது கண்டறியப்பட்டுவிட்டது. விக்ரம் லேண்டரை மட்டும் இயக்க வைத்துவிட்டால், சிவன் குழுவுக்கு அது மெகா சாதனையாக அமையும்.