விக்ரம் லேண்டருடன் இதுவரை தொடர்பு ஏற்பட்டதா ?

இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சந்திரயான்-2ல் உள்ள ஆர்பிட்டரின் மூலம், விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், விக்ரம் லேண்டருடன் இதுவரை தொடர்பு ஏற்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த 7ம் தேதி சந்திரனில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர், திடீரென அதிகாலை 1.51 மணி அளவில் திசை மாறிச் சென்று தொடர்பை துண்டித்துக் கொண்டது. இதையடுத்து, ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படத்தின் மூலம், லேண்டர் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது. மேலும், அது சாய்ந்த நிலையில் நிலவில் பத்திரமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதனுடனான தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை இஸ்ரோ தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.