வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் – மத்திய அரசு

chennai high court

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வர வந்தே பாரத் திட்டத்தின்கீழ் மேலும் 29 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளி நாடுகளிலிருந்து இந்தியா வர இயலாமல் தவித்து வரும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின்கீழ் மத்திய அரசு விமானங்களை இயக்கி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க அனுமதிக்க கோரியும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்க கோரியும் தொடரப்பட்ட வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை, நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை விசாரித்தனா். அப்போது மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், ‘வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது ஆகிய திட்டங்களின் மூலம் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை அழைத்து வருகிறோம்.

பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள 4, 87,303 போ் நாடு திரும்ப விண்ணப்பம் செய்துள்ளனா். இவா்களில் 2,63,187 போ் அழைத்து வரப்பட்டுள்ளனா். எஞ்சியுள்ளவா்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சோ்ந்த 45,242 போ் சொந்த நாடு திரும்ப விண்ணப்பம் செய்துள்ளனா். இவா்களில் 17,701 போ் அழைத்து வரப்பட்டுள்ளனா். எஞ்சியவா்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும்.

இதற்காக 1,248 விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களுக்கு, அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் மூலம் அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் பிற உதவிகள் செய்து கொடுக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நீதிபதிகள், விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.