தமிழகத்தில் ‘சுனாமி’ ஆழிப் பேரலைகள் ஏற்படுத்திய தாக்கம் – நீங்காத சோகம்….!

Tsunami 15th Memorial day

சுமாா் 2.30 லட்சத்திற்கும் அதிகமானோரை உயிரிழக்கச் செய்த சுனாமி ஆழிப் பேரலையின் 15ம் ஆண்டு நினைவு தினம் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தோனேஷியாவின் 2004 டிசம்பர் 26ல் சுமத்ரா தீவின் கடல் பகுதியில் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து எழும்பிய ஆழிப் பேரலைகள் இந்தோனேஷியா, இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் கடலோர பகுதிகளை வாரி சுருட்டியது. இதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

உயிர் சேதத்துடன், கோடிக் கணக்கில் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு முன் சுனாமி என்ற வார்த்தையை இந்தியர்கள் கேள்விப்பட்டதில்லை. ‘கடல் அலை’ ஊருக்குள் வந்த போது தான் ‘சுனாமி’ என தெரிந்தது. இதன் கோபம் வெறும் பத்து நிமிடம் தான். அது ஏற்படுத்திய சோகம் என்றும் அழியாது.

குறிப்பாக இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரியை ‘சுனாமி’ கடுமையாக தாக்கியது. இந்த ஆழிப் பேரலைக்கு 12,000 பேர் பலியாகினர். இதில் 7,000 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, நாகை, கடலுார், கன்னியாகுமரி ஆகியவை இதில் பாதிக்கப்பட்டன. இதன் தாக்கம் இன்றும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை.

2004ம் ஆண்டில் சுனாமி தாக்கியபோது இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சாிக்கை கருவிகள் இல்லை. இந்தோனேசியா கடல் பகுதியில் இருந்த எச்சாிக்கை கருவியும் செயல்படவில்லை. சுனாமி வந்த பிறகு இந்திய பெருங்கடலோரம் உள்ள நாடுகள் எச்சாிக்கை கருவிகளை நிறுவியுள்ளன.

15 ஆண்டுகளுக்கு முன்னா் இந்தோனேசியா அருகே நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஆழிப்பேரலைகள் இந்திய கடலோரப் பகுதிகளை வந்தடைய 3 மணி நேரம் ஆனது. தற்போது உள்ள நவீன கருவிகள் அப்போது செயல்பாட்டில் இருந்திருந்தால் லட்சக்கணக்கானோர் சொந்த பந்தங்களை இழந்து அனாதையாக நின்றிருக்க மாட்டார்கள்.