வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நியூயார்க்கில் இருந்து சிறப்பு விமானத்தில் 329 பேர் இந்தியா வந்தனர்

உலகின் பல நாடுகளிலும் கொரோனா வைரசின் தாக்கம் பரவி வருகிறது. இதனால் வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் தாங்கள் சொந்த ஊர் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.

இதன் அடிப்படையில் அரசு, வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்க “வந்தே பாரத்” எனும் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா போன்ற விமான நிறுவனங்கள் மூலமும் கடற்படை மூலமாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் அமெரிக்காவிலிருந்து நாட்டு மக்களை ஏர் இந்தியா விமானம் மூலமாக திரும்ப அழைத்து வருவதற்காக ஏழு விமானங்களை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டி.சி, சிகாகோ மற்றும் நியூயார்க் ஆகிய நாடுகளிலிருந்து விமானங்கள் பயணிகளுக்கான சேவையில் ஈடுபடும் என கூறப்படுகிறது. இரண்டாம் கட்டமாக இந்த 7 விமானங்களில் சான் பிரான்சிஸ்கோ-2, சிகாகோ-2, நியூயார்க்-2 மற்றும் வாஷிங்டன்-1 என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஜே.எப்.கே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 2 குழந்தைகள் உட்பட 329 இந்தியர்கள் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலமாக பெங்களூரு வந்ததாக கூறப்படுகிறது. இந்த விமானம் நேற்று நியூயார்க் நகரத்தில் இருந்து புறப்பட்டது.

மேலும் “வந்தே பாரத்” திட்டத்தின் மூலம் நியூயார்க் நகரத்தில் இருந்து வரும் நான்காவது விமானம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூயார்க்கின் இந்திய தூதரக தலைவர் சந்தீப் சக்கரவர்த்தி மற்றும் துணை தலைவர் சத்ருகன் சின்ஹா ஆகியோர் பயணிகளை பரிசோதித்து, பாதுகாப்புடன் அனுப்ப வைக்கும் பணிகளில் உடன் இருந்தனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.