ஊரக உள்ளாட்சித் தேர்தல் – ஆன்லைனில் புள்ளி விவரத்துடன் முடிவுகளை பார்ப்பது எப்படி?

TN local body election result
TN local body election result

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி, பஞ்சாயத்து, நகராட்சி ரீதியாக வெற்றி பெற்ற வேட்பாளர்களை ஒரே இடத்தில் பார்க்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வசதி ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று முதல் எண்ணப்படுகின்றன. 27 மாவட்டங்களில் உள்ள 315 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு டிச. 27ம் தேதியும் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு 30ம் தேதியும் நடந்தது. 49 ஆயிரத்து 688 ஓட்டுச்சாவடிகளில் 2.58 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதனால் முதற்கட்டத்தில் 76.19 சதவீதம்; இரண்டாவது கட்டத்தில் 77.73 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின. தேர்தல் பாதுகாப்பு பணியில் 63 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், ஜனவரி 6ம் தேதி பதவியேற்க உள்ளனர்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள், உடனடியாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த இணையதளத்தில் ஊரகப்பகுதிகளில் கட்சிகள் அடிப்படையிலான பதவிகள் பிரிவில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் என்ற பகுதியும், ஊரகப்பகுதிகளில், கட்சிகள் அடிப்படையில்லாத பதவிகள் பிரிவில், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என்ற பகுதியும் வகுக்கப்பட்டுள்ளன.

வெற்றி பெற்றவர்களை எப்படி பார்ப்பது…

இணையதளத்தின் முகப்புப்பக்கத்தில், அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றவர்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என்ற பகுதியில் மாவட்டங்கள் வாரியாகவும், பஞ்சாயத்துகள் வாரியாகவும், ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாகவும் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்வுடன் உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

அரியலூர், மதுரை, ஈரோடு, கன்னியாகுமரி என மாவட்ட வாரியாக வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை, முடிவு அறிவிக்கப்பட்டவை, வெற்றி பெற்ற வேட்பாளர்கள், கட்சி, உள்ளிட்ட விபரங்கள் விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவுகளை வரைபடம் ஆகவும், பை வரைபடமாகவும் பார்க்கவும் இந்த இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.