10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 12 ஆயிரத்து 546 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ மாணவிகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின.

தமிழகத்தில் அரசு பள்ளி 92.48 தேர்ச்சி விகிதமும் மற்றும் மெட்ரிக் பள்ளி 99.05 தேர்ச்சி விகிதமும் பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர்கள் 93.30% தேர்ச்சியும் மாணவியர் 97% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இந்த வருடமும் மாணவிகள் மாணவர்களை விட அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் மொழிப்பாடத்தில் 96.12 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 97.35 சதவீதம் மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 96.46 சதவீதம் பேரும், அறிவியலில் 98.56 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். சமூக அறிவியல் பாடத்தில் 97.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் (98.53%) முதலிடத்திலும், வேலூர் மாவட்டம் (89.98%) கடைசி இடத்திலும் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் 97.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3.2 சதவீதம் அதிகம் ஆகும். புதுச்சேரியில் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 94.88 சதவீதமாக உள்ளது.