திருச்சி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி, 70. இவர் நேற்று காலை துறையூர் பஸ் ஸ்டாண்டில் ஊருக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர், அவரை தனியே அழைத்தனர். முன்பின் தெரியாதவர்கள் என்பதால், அவர்களுடன் செல்ல மறுத்துள்ளார்.
ஆனால் அவர்கள் அவரை கட்டாயப்படுத்தி தோளில் கை போட்டு பேசியபடி, சிறிது தூரம் அழைத்துச் சென்றனர். தங்களிடம் சிங்கப்பூர் தங்கம் உள்ளது, அது வேண்டும் என்றால் மோதிரத்தை தர வேண்டும் என, கேட்டுள்ளனர். பின் அவர் கையில் இருந்த ஒருபவுன் மோதிரத்தை கழற்றிக் கொண்டு, சிங்கப்பூர் தங்கம் என, ஒரு பொட்டலத்தை அவர் கையில் திணித்தனர்.
மேலும் அவர் வைத்திருந்த, 350 ரூபாயையும் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டனர். சிறிது நேரம் கழித்துதான், துரைசாமி தன் மோதிரம் திருடப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் படி, துறையூர் போலீசார், முதியவரிடம் நூதனமாக மோதிரம் திருடிய மூவரையும் தேடி வருகின்றனர்.