பர்மாவில் மாணவர்களுக்கு தமிழ் பாடம் நடத்திய நாகப்பட்டினம் MLA தமிமுன் அன்சாரி!

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர், மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பர்மா சென்றுள்ளார்.

பர்மாவில் வரலாற்று ஆய்வு குறித்த இந்த சுற்றுப்பயணத்தில், அங்குள்ள மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுத்தது அனைவரையும் ஈர்த்துள்ளது. தலைநகர் யாங்கூனில், சூலியா முஸ்லிம் சன்மார்க்க சேவைக்குழு (CMRSS) என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் , மாலை நேர தமிழ் வகுப்பு நடத்தப்படுகிறது. அங்கு அவர் வருகை மேற்கொண்டார்.

மியான்மர் நாட்டில் பர்மிய மொழியில் மட்டுமே கல்வி போதிக்கப்படுகிறது. எனவே, தமிழ் படிக்கும் வாய்ப்பு அங்குள்ள மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. பர்மாவில் புதிய தலைமுறை இளைஞர்களுக்கு, தமிழ் கற்றுக் கொடுக்கும் வகையில், இவ்வமைப்பு நடத்தும் பாடசாலைக்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர். வேலைக்கு செல்லும் இளைஞர்களும் இங்கு வருகின்றனர்.

9 ஆண்டுகளாக சலாமத் என்ற தமிழ் ஆசிரியை இங்கு மாணவ, மாணவிகளுக்கு தமிழ் பாடம் நடத்துகிறார். அங்கு சென்ற தமிமுன் அன்சாரி, அந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழ் பாடம் நடத்தினார்.

MLA தமிமுன் அன்சாரி அவர்களை “தமிழ் இந்து மாமன்றம்” சிறப்பான வரவேற்றது. இந்த சந்திப்பு பர்மா வாழ் தமிழர்களின் நல்லிணக்க சிந்தனைகளை வெளிக்காட்டுகிறது, என மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கூறினார்.