வெளிநாடுவாழ் தமிழர்களை மத்திய அரசுடன் இணைந்து மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் – தமிழக முதல்வர்

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் சிறப்பு விமானங்கள் மூலம் கூட்டிச்செல்லும் படி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது இந்திய அரசு வந்தே பாரத் என்னும் திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு வருகின்றது. இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டரில், “வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்புவதற்கு முடியாமல் தவித்த தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மத்திய அரசின் “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ், 10 சிறப்பு வானூர்திகள் மூலம் 1,665 நபர்களும், 2 கப்பல்கள் மூலம் 264 நபர்களும் தமிழ்நாடு திரும்பியுள்ளனர்.” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் மற்றுமொரு பதிவில்,”வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்ப விரும்பும் மேலும் பல தமிழர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து அவர்களையும் அழைத்து வர உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.” என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பு சென்னைக்கு விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தை துவங்க வேண்டாம் என்று தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.