உலகிலேயே குழந்தைகளின் ஆபாசப்படம் பார்ப்பதில் தமிழகம் முதலிடம்; கைது நடவடிக்கை விரைவில்…!

Tamil Nadu top in child pornography list

உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைகள் ஆபாசப்படம் பார்க்கப்படுவதாகவும், அதில் இந்தியாவில் தமிழகம் முதலிடமும், தமிழகத்தில் சென்னை முதலிடமும் வகிப்பதாகவும் தகவல் ஒன்று ஊடகங்களில் பரவி வருகிறது.

“அமெரிக்க புலனாய்வுத் துறை இந்திய உள்துறைக்கு அனுப்பிய தகவலின் மூலம், உலகிலேயே குழந்தைகள் ஆபாசப்படம் பார்ப்போர் அதிகளவில் உள்ள நகரம் சென்னை என்று தெரியவந்துள்ளது” என்று அந்த ஊடக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து அறிவதற்கும், மேலதிக தகவல்களை பெறுவதற்கும் தமிழக காவல்துறையின் கூடுதல் காவல்துறை இயக்குனர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு) மு. ரவியை பிபிசி தமிழ் (BBC) தொடர்புகொண்டது.

சென்னை இடம்பெற்றிருப்பது வருத்தத்திற்குரியது:

குழந்தை ஆபாசப்படம் பார்ப்பவர்கள் பட்டியலில் உலகிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளதாக கூறப்படுவது குறித்து அவரிடம் கேட்டபோது, “இந்த தகவலுக்கான ஆதாரம் எங்களிடம் இல்லை. எனினும், இது தொடர்பாக அமெரிக்காவிலிருந்து ஒரு அறிக்கை மத்திய உள்துறைக்கு வந்தது என்பது உண்மைதான். அதை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தில் குழந்தை ஆபாசப்படம் பார்ப்பவர்களின் பட்டியல் மத்திய உள்துறையிடமிருந்து எங்களுக்கு கிடைத்துள்ளது” என்று அவர் கூறினார்.

மொழி, பண்பாடு உள்ளிட்டவற்றில் பற்றுமிக்க தமிழர்கள் இதுபோன்ற ஒரு பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அது வருத்தத்திற்குரிய ஒன்றுதான். எனினும், அடுத்த ஆண்டிற்குள் இப்படிப்பட்ட ஒரு பட்டியலில் தமிழகம் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.”

தமிழகத்தில் குழந்தை ஆபாசப் படங்களை பார்த்த ஆயிரக்கணக்கானவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக காவல்துறைக்கு அனுப்பியுள்ளதாக கூறுகிறார் ரவி.

குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்த்தவர்கள், தரவிறக்கம் செய்தவர்கள் போன்றவர்களின் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் இணைய முகவரிகளை (ஐ.பி அட்ரஸ்) மத்திய உள்துறை அமைச்சகம் எங்களுக்கு அனுப்பியுள்ளது.

அந்த இணைய முகவரிக்கு சொந்தமான நபர்களின் முழுத் தகவல்களையும் அறியும் வகையில், அந்த தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பகிர்ந்துள்ளோம். வெகுவிரைவில் முழுத்தகவலும் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யும் பணி தொடங்கும்” என்று கூறுகிறார் ரவி.
“இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு கைது செய்யப்படுபவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று முதல் ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகைசெய்யப்படும்.”

எனவே, தற்போதைய சூழ்நிலையில், சட்டத்தை விட தனிமனிதரின் கட்டுப்பாடும், ஒழுக்கமுமே முக்கியத்துவம் வாய்ந்தது என்பதே நிதர்சனம்.