பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் சிங்கப்பூருக்கு நன்றி தெரிவித்த இந்திய பிரதமர் மோடி!

சென்னை ஐஐடி-யின் 56வது பட்டமளிப்பு விழா ஐஐடி வளாகத்தில் இன்று (செப்.30) நடைபெற்றது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதில், கணினி சார்ந்த தொழில்நுட்ப போட்டியான ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசுகளை அளித்தார். Singapore-India Hackathon 2019 என்ற பெயரிலான இந்த போட்டியில் இரு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளை அளித்தார். பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பானது என்றும், இட்லி, தோசை, வடைக்கு இதில் சிறப்பிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஹேக்கத்தான் போட்டிகள், இளம் தலைமுறையின் அறிவுத்திறனை வளர்க்க உதவிடும் என கூறிய பிரதமர், ஹேக்கத்தான் போட்டிக்கு உதவிய சிங்கப்பூர் கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். எதிர்கால தொழில்நுட்பங்களை வடிவமைப்பதற்கு, ஹாக்கத்தான் போட்டி ஒரு துவக்கமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். உலகின் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் தகவல்களை பரிமாற ஹேக்கத்தான் உதவுகிறது என தெரிவித்த நரேந்திர மோடி, போட்டி என்ற நிலையில் இருந்து ஒத்துழைப்பு என்ற கட்டத்திற்கு இரு நாடுகளும் முன்னேறி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.