பர்மா சென்றிருக்கும் நாகை தொகுதி MLA தமிமுன் அன்சாரி அவர்களுக்கு “தமிழ் இந்து மாமன்றம்” சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.!

பர்மா சென்றிருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர், நாகை தொகுதி MLA தமிமுன் அன்சாரி அவர்களுக்கு “தமிழ் இந்து மாமன்றம்” சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ் இந்து மாமன்றத்தின் துணைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதனை அடுத்து நடைபெற்ற விருந்து உபசரிப்பில் இதில் ஜாமியா சூலியா தமிழ் பள்ளிவாசல் நிர்வாக தலைவர் ஜமால், சூலியா முஸ்லிம் சன்மார்க்க சேவைக் குழுவின் ஆலோசகர் தாஜ்தீன் ஆகியோரும் பங்கேற்றனர்.

இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கிருஷ்ணன் கூறும்போது, இந்தியாவில் நடைபெறும் சில நிகழ்வுகள் வருத்தமளிப்பதாகவும், இங்கு தமிழர்கள் என்ற உணர்வுடன் நாங்கள் ஒற்றுமையாக வாழ்வதாகவும் குறிப்பிட்டார்.

இங்கு அரசு அளிக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தனியார் பள்ளியை நிறுவி, அதில் தமிழை விருப்பப் பாடமாக வைத்து, தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல திட்டமிடுமாறும், இங்கு தமிழை வளர்த்தெடுக்க தேவையான ஒத்துழைப்புகளை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் செய்து கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும், தமிமுன் அன்சாரி அவர்கள் கூறினார்.

இது தங்களுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இந்து மாமன்ற நிர்வாகிகள் கூறினர். அது போல் இந்து, முஸ்லிம், கிரித்தவ மக்கள் ஒன்று சேர்ந்து முன்பு நடத்தி வந்த பர்மா தமிழ் சங்கத்தை அதே கொள்கை வடிவில் புதுப்பிக்குமாறு அவர் கூற, அதை அனைவரும் ஆமோதித்தனர்.

இந்நிகழ்வில் இளங்கோவன் இளவரசன், ரமேஷ், உள்ளிட்ட இந்து மாமன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கடந்த 20 ஆண்டுகளில் பர்மாவுக்கு வருகை தந்த முதல் தமிழக MLA நீங்கள் தான் என்றும் அவரை பாராட்டினர்.

இந்த சந்திப்பு பர்மா வாழ் தமிழர்களின் நல்லிணக்க சிந்தனைகளை வெளிக்காட்டுகிறது, என மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கூறினார்.