இரண்டாவது உலகப் போரில் பிரிட்டிஷாரின் ராணுவ தண்டவாளங்களை கொண்டுசெல்லும் மையமாக இருந்து 1957-ல் விமான நிலையமாக மாறியது தற்போதுள்ள மதுரை விமான நிலையம். 62 ஆண்டுகளைக் கடந்து இருந்தாலும் 2008ல் தான் சர்வதேச விமான நிலையமாக ஒப்புதல் தரப்பட்டது. முதற்கட்டமாக 130 கோடி ரூபாய் செலவில் நவீன டெர்மினல் அமைக்கப்பட்டு 17,560 சதுர மீட்டர் பரப்பளவில் 12,500 அடியாக விரிவாக்கம் செய்யப்பட்டு 7500 அடி ஓடுபாதை கொண்ட நவீன விமான நிலையம் 2010-ல் திறக்கப்பட்டது.
இதற்காக 616 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையிலும் இதுவரை 68.73 ஏக்கர் நிலம் மட்டுமே விமானநிலைய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்ட நபர்களுக்கு 94,70,88,936 ரூபாய் வழங்க வேண்டும் .
தமிழக போலீஸ் தொடங்கிய வாட்ஸ்அப் குரூப் – இணைவது எப்படி?
ஆனால் இதுவரை 54,25,96,725 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 916 நபர்கள் மட்டுமே நிலத்திற்கான இழப்பீடு பெற்றுள்ள நிலையில் எஞ்சியுள்ளவர்களுக்கான இழப்பீடு வழங்குவதில் நிலவும் இழுபறி காரணமாக கடந்த ஒன்பது ஆண்டுகளாக மதுரை விமான நிலைய விரிவாக்க பணி கடுமையாக பாதித்துள்ளது.
பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர் இருந்தாலும் இலங்கை, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளுக்கு மட்டுமே விமான சேவை இருந்து வருகிறது. மலேசியா குவைத் , கத்தார், ஓமன், தாய்லாந்து ஆகிய நாடுகள் மதுரைக்கு விமான சேவை வழங்க தயாராக இருந்தும் இரு நாடுகளுக்கான விமான சேவை ஒப்பந்த பட்டியலில் மதுரை விமான நிலையத்தை இணைக்க மத்திய அரசு முன்வராமல் உள்ளது.
2018-ல் கேரளா மாநிலம் கன்னூர் விமான நிலையத்திற்கு வழங்கிய ஒப்புதலை 62 ஆண்டுகள் பழமையான மதுரை விமான நிலையத்திற்கு வழங்க மத்திய அரசு முன்வராதது வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் வாரணாசி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 98,704 பேர். அதே ஆண்டில் மதுரை வந்த விமான பயணிகள் எண்ணிக்கை 3 லட்சத்து 41,679 பேர். மிகக்குறைந்த விமான சேவை கொண்ட, இரவில் விமான சேவையை இல்லாத மதுரை விமான நிலையத்தில் ஓராண்டிற்கு சராசரியாக 3 லட்சத்திற்கும் மேலான பயணிகள் வந்து செல்கின்றனர்.
போதிய விமான சேவை இருந்தால் இதன் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்கின்றனர். சுற்றுலா தலத்திலும் வர்த்தக ரீதியாகவும் மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை இந்திய அளவில் மிகப் பெரியது. இருந்தும் மதுரை விமான நிலையத்தை மேம்படுத்த தொடர்ந்து மத்திய அரசு சுணக்கம் காட்டி வருகிறது.
பெங்களூரு விமான நிலையத்தில் திருமண பத்திரிகையில் கடத்தப்பட்ட போதைப்பொருள் – ஒர்த் 5 கோடி
கடந்த ஐந்து ஆண்டுகளாக விமான நிலைய ஆலோசனைக் குழுவே கூட்டப்படவில்லை என்பதே அதற்கு சாட்சி. விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், மதுரை எம்பி வெங்கடேசன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு சமீபத்தில் நியமிக்கப்பட்டு தற்போது தான் விமான நிலையம் மேம்படுத்த தொடர்பான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
2021-க்குள் மதுரை விமான நிலையத்தை முழு அளவிலான பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்கிற முனைப்பு மேலோங்கி இருக்கக்கூடிய நிலையில் அதற்கான தீவிர முயற்சியில் இறங்கப் போவதாக அதற்கான ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட மொத்த நிலங்களுக்கான இழப்பீடு தொகையை வழங்கி முழுமையான நிலத்தை விமான நிலைய நிர்வாகத்திடம் ஒப்படைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும், தென்தமிழகத்தின் தலைநகராக திகழும் மதுரையை மையமாக வைத்து வெளிநாடுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு முக்கிய நாடுகள் உடனான விமான இணைப்பு சேவையை மதுரைக்கு கொண்டு வர மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.