தென் இந்தியாவிற்கு வெட்டுக்கிளிகள் வர வாய்ப்பில்லை – ஐ.நா கணிப்பு!

கொரோனா பாதிப்பு அடங்குவதற்குள் வெட்டுக்கிளி படையெடுப்பும் இந்திய மக்களுக்கு பெரும் சோதனையாக அமைந்துள்ளது. பயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, ஓமன், ஐக்கிய அரபு நாடுகள், உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்த இந்த வெட்டுக்கிளிகள் வட இந்தியாவை முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. ட்ரோன்கள் மூலம் விவசாய நிலங்களில் பூச்சி மருந்து தெளித்து வெட்டுக்கிளிகளை அழித்தும், விரட்டியும் வருகின்றனர்.

வெட்டுக்கிளிகள், வேகமாக வீசும் காற்றால் வட இந்தியாவில் அதிக அளவில் பரவி இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மத்திய மாநிலங்களான மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா வரை இந்த படையெடுப்பு வந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென் மாநிலங்களும் வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் வெட்டுக்கிளிகள் பாதிப்பு தென் இந்தியாவில் ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு என ஐ.நா.,வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்திற்குள் ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களில் இந்த பாதிப்பு ஏற்படும் என கணித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கட்டுப்படுத்த இன்னும் சில நாட்கள் ஆகலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், சமீபத்திய கனமழைகள் வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கொரோனா பாதிப்பால் ஏற்கெனவே பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது வெட்டுக்கிளிகளின் தாக்குதலும் இணைந்துள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் மக்களின் உணவு தேவைக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.