இனி விமானங்களில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை..! லிஸ்ட் இதோ!

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் அனைத்து போக்குவரத்தும் கடந்த ஐம்பது நாட்களுக்கும் அதிகமாக தடையில் இருக்கின்றது. இந்நிலையை மாற்றும் விதமான முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், எதிர்கால விமான போக்குவரத்தில் கடைபிடிக்க வேண்டிய தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு மூன்றாம் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இன்றுடன் முடிவடைய இருக்கிறது. ஆனால், ஒரு சில மாநிலங்கள் கொரோனா தீவிரம் காரணமாக தடையுத்தரவை நீட்டித்து வருகின்றன.

இருந்தாலும், பொருளாதார வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு லேசான தளர்வுகளையும் அரசு வழங்கி வருகின்றது. இதனடிப்படையில் விரைவில் விமானம், ரயில் மற்றும் பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றது.

முன்னமே இந்திய ரயில்வே மே 30ம் தேதி வரை சேவையை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துவிட்டது. மற்றும் பேருந்து போக்குவரத்து சேவையும் இன்னும் பயன்பாட்டிற்கு வராத நிலையில், விமான சேவை மட்டும் விரைவில் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே விமான பயணத்தின்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அவை:

  • சமூக இடைவெளி கடைபிடிக்கும் விதமாக போர்டிங் பாஸ்-இல் முத்திரை போடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
  • பயணிகள் கட்டாயம் 350 மில்லி கிருமி நாசினி (hand sanitizer) வைத்திருக்க வேண்டும்.
  • 2 மணி நேரத்திற்கும் குறைவான விமான பயணங்களில் உணவு விநியோகம் தடை.
  • உணவிற்கு பதிலாக சிற்றுண்டடி மட்டுமே வழங்கப்படும்.
  • நோய் வாய்படாத ஆரோக்கியமானவர்களால் மட்டுமே பயணிக்க முடியும் (சிறு காய்ச்சல் அறிகுறி இரும்பல், தும்பல் காணப்பட்டாலும் கூட அனுமதி கிடையாது).
  • மிகக் குறிப்பாக விமானத்தின் கேபினுக்குள் லக்கேஜ் அனுமதி கிடையாது.
  • வலை வழியான (web-checkin) சரிபார்ப்பு மட்டுமே செய்யப்படும்.
  • புகைப்பிடித்தல் மற்றும் பிரார்த்தனை பகுதிகளைப் பயன்படுத்தத் தடை.
  • கட்டாயம் செல்போனில் ஆரோக்யா சேது மென்பொருள் தரவிறக்கம் செய்திருக்கி வேண்டும்.
  • மாஸ்க் மற்றும் கையுறைகளை வைரசிடம் இருந்து பாதுகாக்கும் விதமாக கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
  • கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலோ அதை கட்டாயம் படிவத்தில் தெரிவிக்க வேண்டும்.
  • ஆய்வின்போது சந்தேகப்படும்படி யாரேனும் இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
  • 80 வயதுக்கு அதிகமான மூத்த குடிமக்களுக்கு கட்டாயம் பயணத்திற்கான அனுமதி கிடையாது.

இதுபோன்ற விதிகளே தற்போது வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இதனை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் இதைதான் அரசு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஏற்கனவே, வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தின்கீழ் மத்திய அரசு நாட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.