தொடரும் ‘டிக் டாக்’ மரணங்கள் – 17 வயது சிறுவன் ‘டிக் டாக்’ வீடியோ எடுக்க துப்பாக்கியை தவறாக பயன்படுத்தி சுட்டதில் உயிரிழப்பு!

டிக் டாக் செயலியில் வீடியோ எடுக்க துப்பாக்கியை பயன்படுத்திய சிறுவன் தவறுதலாக இயக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தான்.

இன்றைய கால கட்டத்தில் அதிநவீன புதிய செயலிகள் இளைஞர்களையும், சிறுவர்களையும் ஏன் வயதானவர்களையும் தன் வசம் கட்டி போட்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு இந்த புதிய இசை சம்பந்தமான செயலிகளின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

மேற்கத்திய மகாராஷ்டிரா மாநிலத்தில் சீரடி பகுதியில் 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பாரதிக் வதேகர் என்ற சிறுவன் டிக் டாக் வீடியோ எடுக்க துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

அந்த ஓட்டலில் சிறுவன் உடன் 4 குடும்ப உறுப்பினர்கள் இருந்ததாகவும், இருவரை கைது செய்துள்ளதாகவும், மற்றவர்கள் சம்பவ இடத்தை விட்டு ஓடி விட்டதாகவும், போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த டிக் டாக் செயலியை இந்திய அரசு தடை செய்த போதிலும், பலர் இந்த செயலியை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

ஆபாசமும், கலாச்சார சீரழிவும் நிறைந்த இதுபோன்ற செயலிகளினால் தொடர்ந்து பலர் உயிரிழந்த வண்ணம் உள்ளனர், என்று பல சட்ட வல்லுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.