தன்னுடைய காதலி விமான பணியை விட கோரி, விமானத்தை கடத்த போவதாக மிரட்டல் விடுத்த இந்தியருக்கு ஆயுள் தண்டனை!

தன்னுடைய காதலி விமான பணியை விட கோரி, ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்த போவதாக மிரட்டல் விடுத்த இந்திய தொழிலதிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, இந்திய தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அக்டோபர் 2017, மும்பை – டெல்லி விமான பயணத்தின் போது இந்திய காதலன் பிர்ஜு சல்லா விமான கழிவறையில் மிரட்டல் கடிதத்தை எழுதிவைத்திருந்ததாக அகமதாபாத் நீதிமன்றம் கண்டறிந்தது. அந்த குற்றத்திற்காக கூடுதலாக அவருக்கு 50 மில்லியன் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

விமானம் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்கு செல்ல வேண்டும், என்று அந்த மிரட்டல் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது. இதனை அடுத்து விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் தரை இறங்கியது.

போலியான மிரட்டல் என்றாலும் சட்டத்தின் படி குற்றம் குற்றம் தான், என்று கூறி அவருக்கு ஆயுள் தண்டனை நீதிபதிகள் வழங்கினர்.

போலியான கடிதத்தின் மூலம் மிரட்டல் விடுத்த சல்லாவிற்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை விமான சம்பந்தமான பணிகளுக்கும், விமான பணியாளர்களுக்கும் பங்கிட்டு கொடுக்க சிறப்பு நீதிபதி M K Dave உத்தரவிட்டார்.

சல்லா ஏற்கனவே திருமணம் ஆனவர். ரகசியமாக விமான பணிப்பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து, டெல்லியில் இருந்து மும்பைக்கு குடிபெயர அந்த பெண்ணை அழைத்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் இந்த போலியான மிரட்டல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

நீதிமன்ற உத்தரவு நகல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை, கிடைத்த பிறகு இந்த வழக்குக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக சல்லா வழக்கறிஞர் ரோகித் வெர்மா கூறியுள்ளார்.