‘பிறப்பால் பிராமணர்கள் உயர்ந்தவர்கள்’! – இந்தப் பதவியில் இருந்து கொண்டு இப்படி பேசலாமா?

இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிராமணர்கள் தங்கள் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் பிற சமூகங்களுக்கு வழிகாட்டுதல் போன்றவற்றின் மூலம் பிறப்பால் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்து இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த அகில் பிராமின் மஹாசபா கூட்டத்தில் ஓம் பிர்லா பேசுகையில், “மற்ற எல்லா சமூகங்களுக்கும் வழிகாட்டும் வகையில் பிராமண சமூகம் எப்போதும் செயல்படுகிறது, மேலும் இந்த தேசத்தில் இச்சமூகம் எப்போதும் வழிகாட்டுதலை மேற்கொண்டுள்ளது. சமுதாயத்தில் கல்வியையும் மதிப்புகளையும் பரப்புவதில் எப்போதும் அது பங்காற்றுகிறது. இன்றும் கூட ஒரு பிராமண குடும்பம் ஒரு கிராமத்திலோ அல்லது ஒரு குடிசையிலோ வாழ்ந்தாலும், அந்த பிராமண குடும்பம் எப்போதும் அதன் அர்ப்பணிப்பு மற்றும் சேவையின் காரணமாக ஒரு உயர் நிலையிலேயே இருக்கிறது. ஆகவே, பிராமணர்கள் தங்கள் பிறப்பின் காரணமாக சமூகத்தில் உயர்ந்த மதிப்பில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

பிர்லாவும் பிராமண சமூகத்தின் மீதான தனது பாராட்டுக்களை ட்வீட் செய்ததோடு, அதுகுறித்த அப்டேட்டை பேஸ்புக்கிலும் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் அறிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து, ‘சபாநாயகர் என்ற தனது பதவியை மதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

ராஜஸ்தனுக்கான மக்கள் சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் (பி.யூ.சி.எல்) தலைவர் கவிதா ஸ்ரீவஸ்தவா, பிர்லாவின் அறிக்கையை கண்டித்து, அவரது வார்த்தைகளை திரும்பப் பெறுமாறு கோரினார், “மற்ற சமூகத்திற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவது என்பது அரசியலமைப்பின் 14 வது பிரிவுக்கு எதிரானது. இது ஒரு வகையில் மற்ற சாதியினரை இழிவுபடுத்துகிறது, சாதிவாதத்தை ஊக்குவிக்கிறது” என்றார். மேலும், பிர்லாவுக்கு எதிராக ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு புகார் அனுப்புவதாகவும் ஸ்ரீவஸ்தவா அறிவித்தார்.

மேலும் அந்த கூட்டத்தில், “இந்த நாட்டில், இன்றும் பெரும்பாலான ஆசிரியர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நீங்கள் காணலாம்” என்றும் ஓம் பிர்லா பேசியிருக்கிறார்.