ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளில் தவிப்பு- மத்திய மாநில அரசுகள் எப்போது ஏற்பாடு செய்யும் என எதிர்பார்ப்பு..!

தாயகம் திரும்பும் பயணிகள் வேதனை!
This picture copyright to their respective owner(s)

தமிழகத்தில் சிக்கியிருக்கும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களை திருப்பி அனுப்ப மத்திய அரசு ஆணையிட்ட மறுகணமே தமிழக அரசு அந்த செயல்பாட்டை கொண்டு வந்தது. அனால் சிங்கப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பல்வேறு தமிழர்கள் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கியதில் சீனா, இத்தாலி போன்ற நாடுகளுக்கு நடந்த பாதிப்பைக்கண்டு மற்ற உலக நாடுகள் அனைத்தும் உடனே ஊரடங்கை பிறப்பித்தன. அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. இன்னும் சில நாடுகள் ஊரடங்கு அறிவிக்கா விட்டாலும் பிற நாடுகளிலிருந்து கொரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக விமான, கப்பல் போக்குவரத்தை நிறுத்திவிட்டன.

இதனால் பல நாடுகளுக்கு சென்ற பயணிகள் ஆங்காங்கே சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்க இந்தியா “வந்தே பாரத்” என்ற திட்டத்தை அமல்படுத்தி வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வந்துகொண்டிருக்கிறது.

சிங்கப்பூர், மலேசியா, புருனை, தாய்லாந்து, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தர், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த தமிழர்கள் தமக்கான விமானங்கள் எப்போது பட்டியலிடப்படும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

குறிப்பாக சிங்கப்பூரில் சிக்கியிருந்த தமிழர்கள், இந்தியாவின் இந்த நடவடிக்கையால் நமக்கும் ஒரு விமானம் இயக்கப்படும் என நம்பிக்கையடைந்து அதற்கான வேலைகளில் மும்முரமாகினர். தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர், முன்பு சிங்கப்பூர் ஹைகமிஷனராக இருந்ததால் விஷயங்கள் எளிதாகவே கைகூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்றார் போல் திருச்சிக்கு சிங்கப்பூரிலிருந்து ஒரு விமானம் பட்டியலிடப்பட்டது. ஆனால் அந்த விமான சேவை திடீரென ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சிங்கப்பூரிலிருந்து டெல்லிக்கு 2, மும்பைக்கு 1, பெங்களூருக்கு ஒரு விமானங்கள் இயக்கப்பட்டு, அந்தந்த மாநில மக்களை மட்டும் ஏற்றிச்சென்றன.

சிங்கப்பூரில் தமிழர்கள்தான் அதிகம். ஆனால் அதிகமாகக் காணப்படும் தமிழர்களுக்கு ஏன் ஒரு விமானம் இயக்கப்படவில்லை என கேட்கவும், மத்திய அரசிடம் பேசி உடனடியாக விமானம் இயக்கவும் தமிழக அரசு மும்முரம் காட்டவில்லை. அது ஏன் என சிங்கப்பூரிலிருந்து தமிழகம் வரக் காத்திருக்கும் தமிழர்கள் கொதிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், முந்தைய மாதங்களில் சிங்கப்பூர் சென்று கொரோனா தொற்று பிரச்சனையால் ஊர்திரும்ப முடியாத தமிழர்கள், ஊர் திரும்ப பதிவுசெய்ய, தன் இணைய தளமான nonresidentamil.org/REGISTER-ல் ஒரு ஆன்லைன் பதிவுப் படிவத்தை வெளியிட்டது. அந்தப் படிவத்தை நிரப்பமுயன்ற பலரும் அதில் சில சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்ததாக புகார் செய்துள்ளனர்.

“தமிழக அரசு நிலைப்பாடுதான் விமான சேவைக்குத் தடையாக இருக்கிறது”’என்கிறார், சிங்கப்பூரில் உள்ள இந்திய ஹைகமிஷனர் அஷ்ரப். வெளிநாடுகளில் தங்கியிருக்கும் மலையாளிகள் குறித்து தேசவாரியாக விவரங்கள் சேகரித்து, அவர்கள் கேரளம் திரும்ப பினராய்விஜயன் காட்டும் அக்கறை தமிழக முதல்வரிடம் இல்லையே என சிங்கப்பூரில் சிக்கியிருக்கும் தமிழர்கள் வேதனை அடைகிறார்கள்.