2019-ல் பாதுகாப்புப் படைக்கான அதிக நிதி ஒதுக்கிய நாடுகள் – இந்தியாவிற்கு மூன்றாமிடம்

உலக அளவில் 2019-ஆம் ஆண்டில் பாதுகாப்புப் படைக்கான அதிக நிதி ஒதுக்கிய நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. பிரிட்டனை சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம், உலக நாடுகள் 2019-ஆம் ஆண்டில் தங்களின் பாதுகாப்புக்காக செலவிட்டதை ஆய்வு செய்து அந்த அறிக்கையை வெளியிட்டது.

அதில், கடந்த ஆண்டில் உலக நாடுகள் பாதுகாப்புப் படைக்காகச் செலவு செய்த தொகை, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயா்ந்திருந்தது கண்டறியப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டில் உலக நாடுகள் சுமார் ரூ.134.19 லட்சம் கோடியை பாதுகாப்புக்காக செலவு செய்துள்ளன. இது 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.6 சதவீதம் அதிகமாகும்.

அவ்வாறு செலவு செய்த நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் அமெரிக்கா மட்டும் பாதுகாப்புத் துறைக்கு ரூ.51.24 லட்சம் கோடி செலவு செய்திருந்தது. இது 2018-ஆம் ஆண்டில் செலவிட்டதை விட 5.3 சதவீதம் அதிகமாகும்.

இரண்டாம் இடத்தில் சீனா (ரூ.18.27 லட்சம் கோடி) மற்றும் மூன்றாம் இடத்தில் இந்தியா (ரூ.4.98 லட்சம் கோடி) கடந்த 2019ம் ஆண்டு செலவிட்டுள்ளன. பட்டியலில் ரஷியா, சவூதி அரேபியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஆசிய நாடுகளை பொருத்தவரையில், சீனா, இந்தியாவுக்கு அடுத்து ஜப்பான் (ரூ.3.33 லட்சம் கோடி) மற்றும் தென் கொரியா (ரூ.3.07 லட்சம் கோடி) ஆகியவை பாதுகாப்புத் துறைக்கு 2019-ஆம் ஆண்டில் அதிக அளவில் நிதியை செலவிட்டிருந்தன.