சிங்கப்பூர் உட்பட பயணிகளுக்கு தங்கம் கடத்த திருச்சி விமான நிலைய அதிகாரிகள் உடந்தையா..?

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

திருச்சி சர்வதேச விமான நிலையம் வழியாக தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், வெளிநாட்டில் இருந்து ஆமைக்குஞ்சுகள் உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் கடந்த ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது ‘குருவி’கள் போல செயல்பட்டு தங்கம் கடத்தி வந்த பயணிகளுடன் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு விமான நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் 2-வது முறையாக கடந்த 5-ந் தேதி இரவு முதல் மறுநாள் 6-ந் தேதிவரை தொடர்ச்சியாக 2 நாட்கள் மத்திய சுங்கத்துறை வருவாய் புலனாய்வு பிரிவு துணை இயக்குனர் கார்த்திகேயன் தலைமையில் 22 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.

சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகள், வியாபாரிகள் என 130 பேரிடம் சோதனை நடத்தப்பட்டு 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.11 கோடி ஆகும்.

மேலும், தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகப்படும் மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையில் சிலர், தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் திருச்சி விமான நிலையத்தில் மத்திய சுங்கத்துறை வருவாய புலனாய்வு பிரிவில் பணியாற்றிய உதவி ஆணையர்கள் பண்டாரம், ஜெயக்குமார் ஆகியோர் விமான நிலையத்திலிருந்து திருச்சி சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கும், ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜெயச்சந்திரன் கோவை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தங்கம் கடத்தலுக்கு மேலும் சில அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும், அவர்களும் விரைவில் சிக்குவார்கள் என்றும் விமான நிலைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Source : Daily Thanthi