விமானத்தில் கடத்தி வந்த 1.26 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது..!

சென்னை விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் 1.26 கோடி மதிப்புடைய 3.2 கிலோ தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, இலங்கை பயணிகள் உட்பட 5 பேரை கைது செய்தனர். இலங்கையை சேர்ந்த இருவர், நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு, சென்னை திரிசூலம் மெட்ரோ ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து பாரிமுனை செல்வதற்கு டிக்கெட் வாங்கினர். பின்னர், ரயில் நிலைய உள் பகுதிக்குள் சென்றபோது, மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள், அவர்களது கைப்பையை ஸ்கேன் செய்தனர். அப்போது, அதில் தங்கக்கட்டிகள் இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது.

உடனே, அவர்கள் இருவரையும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்காமல், சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார், அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், நேற்று முன்தினம் மாலை 6.20 மணிக்கு இருவரும் இலங்கையில் இருந்து ஏர் இண்டியா விமானத்தில் தங்க கட்டிகளை சென்னைக்கு கடத்தி வந்ததும், விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் தங்கக் கட்டிகளுடன் வெளியில் வந்ததும் தெரியவந்தது.