உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் – கேரள செவிலியர் உடலில் வைரஸ் கண்டுபிடிப்பு

சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் கேரளாவை சேர்ந்த செவிலியருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சவுதி அரேபியாவின் அல் ஹயாத் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 100க்கும் மேற்பட்ட இந்திய செவிலியர்களுக்கு கொரோனோ வைரஸ் தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு கொரொனோ வைரஸ் தாக்குதல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வைரஸ் பாதிப்புக்குள்ளான செவிலியருக்கு தனியறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை தற்போது தேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் பிரேசில் அதிபர் நான்கு நாள் சுற்றுப்பயணம் – விவாதிக்கப்படும் விஷயங்கள் என்ன?

கொரோனா வைரஸால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனோ வைரஸை எதிர்கொள்வதற்காக சோதனை மையம், தனி வார்டு தயார் நிலையில் உள்ளதாக பிபிசிக்கு மருத்துவமனை டீன் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள பதிவின்படி, ஜெயந்தி அளித்த பேட்டியில் ”கொரோனா வைரஸ் பற்றிய தகவல் கிடைத்ததும், சீனாவிலிருந்து வரும் பயணிகளைச் சோதித்து தமிழகத்திற்குள் அனுப்புவது என அரசு முடிவுசெய்தது. தற்போது விமானம் மற்றும் ரயில் நிலையங்களில் முதல்கட்ட பரிசோதனை மையங்கள் இயங்குகின்றன. ஒருவேளை, நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், உடனடி சிகிச்சை தரவேண்டும் என்பதற்காக மருத்துவர்களுக்கு தினமும் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம்” என்றார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் குறித்து கூறுகையில், ”இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. ஒருவேளை, காய்ச்சல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் நீடிப்பதாக நோயாளிகள் வந்தால், முதலில் அவர்கள் சமீபத்தில் சீனாவுக்குச் சென்றவர்களா என அவர்களின் பயண விவரங்களை கேட்டறிவோம். பயணம் செய்தவராக இருந்து, தொடர்ந்து காய்ச்சல் இருந்தால், வைரஸ் தொற்று இருக்கிறதா என சோதனை செய்த பிறகு, சிகிச்சை அளிப்போம்,” என்றார்.

பிற வைரஸ் காய்ச்சல் போலவே தும்மல் மூலமாகவும், சளி மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவும் என்று கூறிய அவர், ”கைகளில் சுத்தம் அவசியம். தும்மல் வந்தால், சளி, எச்சில் தெறிக்காமல் கைகளால் மூடிக்கொள்ள வேண்டும். கைகளை உடனடியாக கழுவவேண்டும். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவது எளிது என்பதால், அவர்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.

விமானம் தாமதமானால் நோ டென்ஷன் – சென்னை ஏர்போர்ட்டில் 5 சினிமா தியேட்டர்