சீனாவின் வுஹான் நகரில் பரவி வரும் கொரோனோ வைரஸ் நோயான வுஹான் பாதிப்பு உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிற்கு பயணம் சென்று திரும்பும் அனைத்து பயணிகளையும் தீவிர சிகிச்சைக்குப் பிறகே விமான நிலையங்களில் இருந்து வெளியேற்றுகின்றனர் ஐரோப்பிய நாட்டினர்.
இந்தியாவில் இருந்து சீனாவுக்கு சென்று திரும்பிய நூற்றுக் கணக்கானோரில் கேரளாவைச் சேர்ந்த 7 நபர்கள், மும்பையில் இரண்டு பேர், பெங்களூரு மற்றும் ஐதராபாத் நகரங்களில் தலா ஒருவருக்கு இந்த நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : Explained : சீனாவில் அச்சத்தைக் கிளப்பும் வுஹான் வைரஸ்…
இது தொடர்பாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சரவை வெளியிட்டுள்ள “அறிக்கையில் மும்பையில் இருந்து இருவர், பெங்களூரு மற்றும் ஹைதராபத்தில் இருந்து தலா ஒவ்வொருவரின் ரத்தமும் பரிசோதனை செய்யப்பட்டது. புனேவில் இருக்கும் ICMR-NIV வெளியிட்டுள்ள ரத்த பரிசோதனை முடிவுகள் இந்த நான்கு நபர்களுக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை என்று அறிவித்துள்ளது. மும்பையில் இருக்கும் ஒருவருக்கு ரினோவைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளாவில் 73 நபர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து இந்தியா திரும்பியுள்ள சுமார் 20 ஆயிரம் நபர்களுக்கு விமான நிலையத்தில் தீவிர ஆராய்ச்சி செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட பெருநகர விமான நிலையத்தில் தெர்மல் ஸ்கிரீனிங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை இதற்காக தனியாக வார்டினையும் திறந்து தீவிர சிகிச்சை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் கேரளத்தின் பல்வேறு பகுதியில் வசிக்கும் 7 பேருக்கு லேசான காய்ச்சல், தொண்டை பிரச்ச்னை மற்றும் இருமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்று தெரியவந்துள்ளது. அவர்களில் இரண்டு நபர்கள் கொச்சியை சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த 28 நாட்களுக்கும் சீனாவில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் தீவிர கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று கேரள அரசு கூறியுள்ளது. சாதாரண காய்ச்சலில் துவங்கி சார்ஸ் போன்ற நோய்கள் வரை உருவாக்கும் கோரோனா வைரஸ் குடும்பத்தை சார்ந்தது இந்த வைரஸ்.