கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை..!

தமிழ்நாடு: கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியின் கை, கால்களை துணியால் கட்டி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த கொடூர சம்பவத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த மார்ச் 25ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போனார்.

இதனை அடுத்து, மார்ச் 26ஆம் தேதி வீட்டின் எதிரே உள்ள வீட்டின் பின்புறத்தில் இருந்து துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான பிரேத பரிசோதனையில், சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது.

அதை தொடர்ந்து, துடியலூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமியின் வீட்டிற்கு எதிரே மனைவியை பிரிந்து பாட்டி வீட்டில் வசித்து வந்த தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை 31ஆம் தேதி கைது செய்தனர்.

இந்த கோர சம்பவம் தொடர்பாக போலீசார் 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி நிலையில்தான், சந்தோஷ்குமார் என்பவன் சிக்கினான்.

வழக்கு விசாரணை

இதுதொடர்பான வழக்கை கோவை மகளிர் நீதிமன்றம் விசாரித்தது. கடந்த 16ஆம் தேதி அரசுத்தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், எதிர்தரப்பு இறுதி வாதம் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு 27ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி ராதிகா அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தோஷ்குமாரை குற்றவாளி என கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கான தண்டனையை இன்று (27.12.2019) பிற்பகல் 03.00 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக இந்த வழக்கில் இன்னொருவருக்கும் தொடர்பு இருப்பதாக சிறுமியின் தாய் வனிதா கோர்ட்டில் மனு அளித்தார். வழக்கை மறுவிசாரணை நடத்தி, இன்னொரு குற்றவாளியையும் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும், டிஎன்ஏ ஆய்வு முடிவுகளை மேற்கோள்கட்டி இந்த வழக்கில் கூடுதலாக பெண் அதிகாரி நியமனம் செய்து திரும்பவும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

உணவு இடைவேளை முடிந்து 3 மணியளவில் மீண்டும் கோர்ட் கூடியது. சந்தோஷ்குமாருக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், 302 பிரிவின் கீழ் குற்றவாளி தூக்கு தண்டனையும் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.