விமான கோளாறு காரணமாக 8 மணிநேரம் விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் போராட்டம்..!

சென்னை, உள்நாட்டு முனையத்தில் இருந்து மும்பைக்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோ ஏர்லைன்ஸ் விமானம் செல்ல இருந்தது. அதில் 217 பயணிகள், பாதுகாப்பு சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறி தயாராக அமர்ந்திருந்தனர்.

அதனை தொடர்ந்து, “விமானத்தில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டு உள்ளது. அதை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் விமானம் புறப்பட்டு செல்லும்” என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மதியம் 12 மணி ஆகியும் விமானம் புறப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், விமானத்தின் உள்ளேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை விமான ஊழியர்கள் சமாதானம் செய்தனர்.

இதையடுத்து, சுமார் 8 மணிநேர தாமதத்துக்கு பிறகு மதியம் 1.15 மணிக்கு அந்த விமானம் மும்பைக்கு புறப்பட்டு சென்றது.

விமானத்திலேயே பயணிகள் தங்க வைக்கப்பட்டதாகவும், இது விமான போக்குவரத்து விதிமுறைகளுக்கு எதிராக இருந்ததாகவும் பயணிகள் புகார் செய்ததாக கூறப்படுகிறது.