சிங்கப்பூர் நண்பர்களே… சென்னையில் உருவாகும் 2வது பிரம்மாண்ட ஏர்போர்ட்!

எப்போது தான் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்ற கேள்விகள் வெகு நாட்களாக எழுந்த வண்ணம் இருந்தது. உள்ளூர்வாசிகளுக்கு விட, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சென்னை, திருச்சி ஆகிய இரு விமான நிலையங்களை மட்டுமே அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் மீனம்பாக்கம் விமான நிலையம் தவிர்த்து மற்றொரு விமான நிலையம் இருந்தால், அது நிச்சயம் போக்குவரத்துக்கும் மாபெரும் உதவியாக இருக்கும் சந்தேகமில்லை. அதற்கான காலம் இப்போது கனிந்து வந்திருக்கிறது.

சென்னைக்கு அருகே இரண்டு இடங்களை நேரில் பார்த்து ஆராய்ந்துள்ளனர் ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் முக்கிய நிர்வாகிகள். காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்திற்கு நடுவே அமைந்திருக்கும் பரந்தூர் மற்றும் மாமண்டூர் – செய்யூருக்கு இடையே அமைந்திருக்கும் ஓரிடத்தையும் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர் நிர்வாகிகள்.

இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் “இரண்டு இடங்களையும் பார்வையிட்டுவிட்டோம். தற்போது இதர முக்கியம்சங்களை நாம் காண வேண்டும். ஒப்பந்தம் மற்றும் இடத்திற்கான பத்திரங்கள் ஆகியவற்றை கவனிக்க வேண்டும். இந்த இரண்டாவது விமானநிலையத்திற்காக மாநில அரசு 3,500 ஏக்கர் நிலத்தை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் இந்த விமானநிலையம் சென்னை தெற்கிற்கும், ஏற்கனவே இருக்கும் விமான நிலையத்திற்கும் வெகு தொலைவில் அமைந்துவிடக் கூடாது என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது மாநில அரசு. மேற்பார்வையிடப்பட்ட இரண்டு இடங்களும் சென்னைக்கு 80 கி.மீ தொலைவில் தான் அமைந்திருக்கிறது.

இது மட்டுமல்லாமல், இந்த விமான நிலையம் அமைய இருக்கும் இடங்களில் இருக்கும் தடைகள், மலைகள், கட்டிடங்கள், அருகில் இருக்கும் பாதுகாப்புப் படையினரின் விமான ஓடுதளம் ஆகியவை குறித்தும் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்றும் அவர் கூறினார். தாம்பரம் மற்றும் அரக்கோணம் பகுதிகளில் ஏற்கனவே பாதுக்காப்பு படைக்கான விமான தளம் இருக்கிறது. இங்கு மக்கள் பயன்பாட்டிற்காக விமானங்கள் பயன்படுத்தலாமா என்று மத்திய அரசிடம் ஆலோசனையில் ஈடுபட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு விமான நிலையங்கள் அருகருகே அமைக்கப்படுவதில் பிரச்சனை ஏதும் இல்லை. ஏர் ட்ராஃபிக்கை மிக எளிதில் சரி செய்து கொள்ளலாம். மேலும் மிகப்பெரிய நகரங்களில் இரண்டு விமானநிலையங்கள் அமைப்பதற்கான தொலைவிலும் மாற்றங்களை ஏற்கனவே ஏவியேசன் அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. நவி மும்பை விமான நிலையத்திற்கும் மும்பை விமான நிலையத்திற்கும் இடையே வெறும் 45 கி.மீ தொலைவே உள்ளது.

இந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை புது டெல்லியில் ஏ.ஏ.ஐ. கமிட்டி உறுப்பினர்கள் விரைவில் சமர்பிப்பார்கள். இந்த விமான நிலையத்திற்காக 1500 முதல் 2000 ஏக்கர் வரையிலான நிலம் கையகப்படுத்தப்படும். 2024ம் ஆண்டு முதல் சென்னையின் இரண்டாம் விமான நிலையம் செயல்படத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக, இனி எல்லாத்துக்கும் மீனம்பாக்கம் போக தேவையில்லை!!!