சென்னையின் 2வது விமான நிலையம் – பரந்தூர் அல்லது செய்யாறில் அமைவது உறுதி!

சென்னையின் 2-வது விமான நிலையம் அமைவிடம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் இறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் – செய்யாறு இடையே 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான புதிய இடத்தைப் பற்றி மாநில அரசு பற்றி ஆலோசித்து வருகிறது. இதனால், 2-வது விமான நிலையம் அமையப்போவது பரந்தூரிலா? செய்யாறிலா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான கோப்பு உயர் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட நிலையில் அந்த கோப்பு கையெழுத்திடப்படாமல் திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதனால், மாநில அரசு அதிகாரிகள், இரண்டாவது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இரண்டாவது இடத்தை பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் 39 பேருக்கு கொரோனா – சென்னையில் இருந்து குவைத் செல்லும் விமானங்கள் ரத்து

இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் செய்யாறு அருகே முதல்கட்ட நில கணக்கெடுப்பு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. தற்போது சென்னை விமான நிலையத்திலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த புதிய இடம் 2-வது விமான நிலையம் அமைப்பதற்காக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஏற்கெனவே அங்கே அரசு 1500 ஏக்கர் நிலம் உள்ளது. இதனால், இன்னும் தேவையான மிச்ச நிலத்தை அரசு தனியாரிடம் இருந்து கையகப்படுத்த வேண்டும்.

இந்த நில சர்வேவுக்குப் பிறகு இது போதுமான இடம் என்பதை அறிய மற்றொரு ஆய்வை மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் மாநில அரசு கேட்க திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகரில் அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தை கையாள சென்னையின் 2-வது விமான நிலையத்திற்கு குறைந்தது 3500 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு முதலில் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் பகுதியி இடம் தேர்வு செய்யப்பட்டது. பரந்தூரில் உள்ள இடத்தில் 50% மட்டுமே அரசாங்கத்தின் வசம் உள்ளது. அந்த இடத்தில் விமான நிலையம் வர வேண்டுமானால் மீதமுள்ள நிலத்தை தனியார் நில உரிமையாளர்களிடமிருந்து அரசு கையகப்படுத்த வேண்டும்.

பரந்தூருக்கு அடுத்து மற்றொரு இடமாக செய்யாறு அருகே மாத்தூர் பரிசீலிக்கப்பட்டது. முதலில் பரிந்துரைக்கப்பட்ட பரந்தூர் இடத்திற்கு அருகில் ஒரு ஏரி இருப்பதால் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் என்ற யோசனை கைவிடப்பட்டது. நீர் நிலை இருப்பதால் அது விமான நிலைய செயல்பாடுகளுக்கும் விரிவாக்கப் பணிகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கருத்தப்படுறது.

கொரோனா வைரஸ் எதிரொலி – விமான சேவையை நிறுத்திய நிறுவனங்கள், முழு விவரம்!

சென்னை மீனம்பாக்கத்தில் தற்போது உள்ள விமான நிலையம் ஆண்டுக்கு 150 லட்சம் வரை பயணிகளின் போக்குவரத்தை கையாளும் திறன் கொண்டது. ஆனால், அது முந்தைய ஆண்டில், பயணிகள் போக்குவரத்து சுமார் 220 லட்சத்தைத் தொட்டது. இதனால் மற்றொரு விமான நிலையத்தின் தேவையை வலியுறுத்தி முன்னதாக அறிக்கை வெளியானது.

இந்த நிலையில்தான், சென்னையின் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கு காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் முதலில் நிலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. தற்போது இரண்டாவதாக காஞ்சிபுரம் – செய்யாறு இடையே அமைந்துள்ள மாத்தூரில் நிலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னையின் 2-வது விமான நிலையம் அமையப்போவது பரந்தூரா? செய்யாறா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதில் எந்த இடம் விமான நிலையம் அமைப்பதற்கு ஏற்ற இடம் என்பதை இந்திய விமான நிலைய ஆணையம்தான் முடிவு செய்யும்.