சறுக்கிய சந்திரயான் 2 : விரக்தியில் இருந்து மீண்ட சிவன் – அடுத்த அதிரடி அறிவிப்பு!

இந்தியா நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து, சந்திரனில் விக்ரம் லேண்டரை ஸ்மூத் & சாஃப்ட் லேண்ட் செய்யும் போது, அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லேண்டர் என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. லேண்டரிலிருந்து பெங்களூரில் இருக்கும் மிஷன் ஆபரேஷன்ஸ் காம்ப்ளக்ஸ் எந்த தகவலும் வரவில்லை.

இதுகுறித்து, இஸ்ரோ தலைவர் சிவன் தூர்தர்ஷனுக்கு அளித்திருக்கும் பேட்டியில், “தற்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த 14 நாட்களுக்கு மீண்டும் சிக்னல் இணைப்பை பெற முயற்சிப்போம். மொத்தத்தில், சந்திரயான் 2 பணி 100% வெற்றிக்கு மிக அருகில் உள்ளது. அறிவியலில் முடிவுகளை தேடக்கூடாது. மீண்டும் மீண்டும் நடத்தும் சோதனைகளே முடிவுக்கு அழைத்துச்செல்லும்.

சந்திரயான் -2 திட்டத்தில் 90-95 சதவிகித இலக்குகள் எட்டப்பட்டுவிட்டது. சந்திரயான்-2 திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும் சந்திரன் தொடர்பான ஆய்வுகளில் முனைப்பு காட்டுவோம்.

பூமியைச் சுற்றி துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டு வரும் ஆர்பிட்டார் 7.5 ஆண்டுகள் வேலை செய்யும். ஆர்பிட்டரின் நியமிக்கப்பட்ட ஆயுட்காலம் ஒரு வருடம் மட்டுமே. ஆனால் கூடுதல் எரிபொருள் ஆர்பிட்டரில் கிடைப்பதால், ஆர்பிட்டரின் ஆயுள் ஏழரை ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆர்பிட்டாரின் அதிதுல்லிய கேமரா அனுப்ப உள்ள படங்கள் சர்வதேச அளவிலான ஆய்வுக்கு உதவும்.

2019 ல் ககன்யான் திட்டத்திற்காக முழுமையாக தயாராகி வருகிறோம். பிரதமர் மோடி எங்களுக்கு ஊக்கம், ஆதரவு தரும் சக்தியாக உள்ளார். விக்ரம் லேண்டரிடம் இருந்து இழந்த சமிக்ஞையை மீண்டும் உயிர்ப்பிக்க தேவையான முயற்சிகள் நடந்து வருகின்றன” என்று சிவன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விஞ்ஞானிகள் முன்பு உரையாற்றிய பிரதமர் மோடி, “இஸ்ரோ விஞ்ஞானிகளின் இமைப்பொழுதும் சோர்ந்துபோகாத ஈடு இணையற்ற உழைப்புக்கு தலை வணங்குகிறோம். இடையூறுகளால் இலக்குகளில் இருந்து விலக மாட்டோம். விஞ்ஞானத்தில் தோல்வி என்பதே கிடையாது.

நமது விஞ்ஞானிகளை எண்ணி நாடே பெருமைப்படுகிறது. இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களுக்கு நாடும் அரசும் துணை நிற்கும்” என்று உறுதியளித்தார்.