இந்தியாவின் மிகப்பெரிய காபி சாம்ராஜ்ஜியத்தின் நிறுவனர் வி.ஜி. சித்தார்த்தா ஆற்றில் சடலமாக மீட்பு!

காபி எஸ்டேட் உரிமையாளரின் மகனான வி.ஜி சித்தார்த்தா இந்தியாவின் மிகப்பெரிய காபி சாம்ராஜ்ஜியத்தை தன் உழைப்பினால் உருவாக்கினார்.

அவர் கடந்து வந்த பாதையில் இன்ப துன்பங்கள் ஏராளம். எஸ்.எம் கிருஷ்ணாவின் மூத்த மகளை திருமணம் செய்து கொண்டவர் விஜி சித்தார்த்தா. இவர் நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் போனில் பேச சென்றவர் நீண்ட நேரமாகியும் காணவில்லை. இந்நிலையில் இவர் ஆற்றில் குதித்திருக்கலாம்? என்ற சந்தேகத்தின் பேரில் அவரை தேடி வந்தனர். 36 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.

வாழ்க்கையில் அவர் கடந்த வந்த பாதையை பார்ப்போம்:

காபி உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த சித்தார்த்தா (58), சிக்மக்ளூரில் பிறந்தார். இவரது குடும்பம் 140 ஆண்டுகளுக்கு மேலாக காபி தோட்ட தொழிலை செய்து வருகிறார்கள். இவர் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். பின்னர் கடந்த 1983-ஆம் ஆண்டு இந்திய பங்கு சந்தை நிறுவனமான ஜே.எம் நிதி நிறுவனத்தில் வர்த்தக மேலாண்மை பயிற்சியாளராக தனது பணியை தொடர்ந்தார்.

அப்போது அவருக்கு வயது 24 இருக்கும். இரு ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த அவர் தொழில் தொடங்கும் நோக்கத்தில் தந்தையிடம் இருந்து பணத்தை பெற்று கொண்டு பெங்களூர் வந்தார். ரூ.30 ஆயிரத்துக்கு சிவன் செக்யூரிட்டீஸ் என்ற நிறுவனத்தை வாங்கினார்.

இதையடுத்து அதை வே 2 வெல்த் செக்யூரிட்டீஸ் என்ற நிறுவனமாக 2000-ஆம் ஆண்டு பெயர் மாற்றினார். 1992-ஆம் ஆண்டு காபி டே என்று அழைக்கப்படும் அமால்கமேடட் பீன் கம்பெனி என்ற காபி கொட்டைகள் வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார். அதிக வருமானம் ஈட்டியதும் அதை தொடர்ந்து காபி கொட்டைகளை கொள்முதல் செய்வது, கொட்டைகளை வறுப்பது மற்றும் பதப்படுத்துவது உள்ளிட்ட ஒருங்கிணைந்த காபி தொழிலை செய்து வந்தார்.

இந்த தொழில் வெற்றிகரமாக செயல்பட்டது. இவரது தோட்டத்தில் இருந்து 3000 டன் காபி கொட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டன. இந்த நிறுவனம் சுமார் 20 ஆயிரம் டன் கணக்கில் வர்த்தகம் செய்தது. நிதியாண்டின் வெறும் இரண்டே ஆண்டுகளில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய ஏற்றுமதி நிறுவனம் என்ற பெயரை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர் 1996 ஆம் ஆண்டு பெங்களூரில் பிரிகேட் சாலையில் ‘கஃபே காபி டே’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் கிளைகள் தற்போது வியன்னா, செக் குடியரசு, மலேஷியா, நேபாள், எகிப்து ஆகிய நாடுகளில் உள்ளது. கடந்த 2018-ஆம் நிதியாண்டில் அவரது நிறுவனத்தில் வருமானம் சுமார் 2,016 கோடியாக இருந்தது.

போர்ப்ஸ் பத்திரிகையில் இந்தியாவின் 75 ஆவது பணக்காரராக இவரின் பெயர் இடம் பெற்றிருந்தது. பின்னர் 1999-ஆம் ஆண்டு தொழில்நுட்ப பிரபலம் அசோக் சூடா மற்றும் 10 பேருடன் இணைந்து மைன்ட் டிரீ என்ற ஐடி நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் 340 கோடியை சித்தார்த்தா முதலீடு செய்துள்ளார்.

காபி டே மூலம் தொழில்நுட்ப துறையில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு இவர் வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளார். நிறைய தொழில்கள் மைன்ட் டிரீ நிறுவனத்திலிருந்து 20.4 சதவீத பங்கை எல் அன்ட் டி நிறுவனத்துக்கு விற்றதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் 3000 கோடி லாபம் ஈட்டினார். காபி தொழிலை தவிர்த்து உலக தொழில்நுட்ப பூங்கா என அழைக்கப்படும், டங்கிலின் டெவலப்மென்ட்ஸ், சிகால் லாஜிஸ்டிக்ஸ், காபி டே ஹோட்டல்கள், ரிசார்ட்களை என தொடங்கினார்.

இலக்கு மார்ச் 2019-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியா முழுவதும் 1,752 கஃபேக்கள் உள்ளன. 48 ஆயிரம் காபி தயாரிக்கும் இயந்திரங்களும், 403 காபி தூள் விற்பனை கடைகளும் உள்ளன. சித்தார்த்தா நிறுவனத்தில் இந்தியா முழுவதும் 30 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். காபி டேவின் ஆண்டு வருமானம் ரூ 4,264 கோடியாகும். இதன் மூலம் 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ 1,814 கோடி லாபம் கிடைத்தது.

வரும் 2020-ஆம் நிதியாண்டில் 2,250 கோடியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. சித்தார்த்தா 12 ஆயிரம் ஏக்கர் காபி தோட்டத்துக்கு சொந்தகாரர் ஆவார். ஐடி சோதனை காபி தோட்டத்தில் தன்னை ரிலாக்ஸ் செய்ய நீண்ட தூரம் நடப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

பொறியியல் அல்லது MBA படிக்காமல் தனது தொழிலில் ஏராளமான சாதனைகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் சித்தார்த்தா வரி ஏய்ப்பு செய்ததாக புகாரின் பேரில் 2017-ஆம் ஆண்டு சென்னை, பெங்களூர், மும்பை, சிக்மக்ளூர் உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்ற போதுதான் இவருக்கு சிக்கல் ஆரம்பம் ஆனது. இந்த ஆண்டுதான் சித்தார்த்தாவின் சாம்ராஜ்ஜியத்தில் சிறிதாக ஆட்டம் கண்டது. அது முதல் அவருக்கு நஷ்டமே மிஞ்சியது. அவருக்கு 7000 கோடி ரூபாய் கடன் ஆனது.

இதையடுத்து தனது காபி டே நிறுவனத்தை கோகோ-கோலா நிறுவனத்துக்கு ரூ. 10,000 கோடிக்கு விற்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இரு ஆண்டுகளாக தன் வாழ்வில் போராடி வந்த சித்தார்த்தா நேற்று முன் தினம் நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடல் இன்று நேத்ராவதி ஆற்றில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்தியாவின் மிக பெரிய காப்பி சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது.