மும்பை மற்றும் அகமதாபாத் இடையே புல்லட் ரயில் 2023 முதல்..?

மும்பை மற்றும் அகமதாபாத் இடையே புல்லட் ரயில் 2023 முதல் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும்.

புல்லட் ரயில்களில் முக்கிய தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்ய இந்தியா ஜப்பானுடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் புல்லட் ரயில்களினால் கடுமையான வெப்பத்தையும், அதிக அளவு மாசுபாட்டையும் கையாள முடியும் என்று, இந்த தொழிற்நுட்பம் நன்கு அறிந்த அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.

மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் தலைநகரங்களை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் (NHSRCL), இந்திய வெப்பநிலைமைகளுக்கு ஏற்ப ரயில்களைத் தனித்தன்மையாக்க வேண்டும், இவ்வாறு செய்வதன் மூலமாக வெப்பம் மற்றும் தூசி காரணமாக அவை உடைந்து போகாது, என்று தெரிவித்தது.

ஜப்பானில் இயங்கும் ரயில்கள் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை கையாளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிராவில் இந்த ரயில்கள் இயங்கும் பிரிவில், வெளிப்புற வெப்பநிலை 50 டிகிரி கூட கடக்கும் நிலை உள்ளது. எனவே, அதற்காக எங்களுக்கு சில மாற்றங்கள் தேவைப்படும் என்று (NHSRCL) நிர்வாக இயக்குனர் அச்சால் கரே ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார்.

தூசியை எதிர்த்துப் போராடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு இந்தியா 75 ஆம் ஆண்டு சுதந்திரத்தை அடையும் 2022 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் திட்டத்தை முடிக்க ஒரு கால அளவை நிர்ணயித்துள்ளது.

அதற்குள் நெட்வொர்க்கின் ஒரு பகுதியை திறக்க NHSRCL முடிவெடுத்துள்ளது, மேலும் டிசம்பர் 2023 க்குள் முழு மும்பை-அகமதாபாத் இணைப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளது.

மொத்த 508.17 கி.மீ அடங்கிய இப்பாதையில், 155.76 கி.மீ மகாராஷ்டிராவிலும், குஜராத்தில் 348.04 கி.மீ தொலைவிலும், தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் 4.3 கி.மீ அடங்கும். இந்த திட்டத்திற்கு தேவையான நிலத்தில் சுமார் 35% சதவீத நிலம் மட்டும் வாங்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் இந்த திட்டத்திற்க்காக பிரதமர் மோடி மற்றும் அவரது ஜப்பானிய பிரதிநிதி ஷின்சோ அபே ஆகியோரால் மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.