ஏர் இந்தியாவுக்கு இனி எரிபொருள் கிடையாது – எண்ணெய் நிறுவனங்கள் முடிவு!

எரிபொருள் வாங்கிய தொகை ரூ. 4,500 கோடி பாக்கி இருக்கும் காரணத்தினால் ஏர் இந்தியாவுக்கு சப்ளையை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

நாட்டின் பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்திய கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் கடனால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இந்த நிறுவத்திற்கு மத்திய அரசு நிதி உதவி செய்துள்ளது.

இருப்பினும் விமான எரிபொருள் வாங்கியதற்கான தொகையை கூட திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது.
கடந்த 200 நாட்களாக எரிபொருள் அந்நிறுவனம் செலுத்தவில்லை.

அரசு எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் வழங்கியதற்கான தொகையை ஏர் இந்தியா இதுவரை வழங்கவில்லை.

வழக்கமாக எண்ணெய் நிறுவனங்கள் 90 நாட்கள் வரை தான் கடன் வழங்குவது வழக்கம். ஆனால் 200 நாட்கள் தாண்டியும் ஏர் இந்தியா இதனை திருப்பிச் செலுத்தவில்லை.

இதையடுத்து ராஞ்சி, மொஹாலி, பாட்னா, விசாகப்பட்டினம், புனே மற்றும் கொச்சின் ஆகிய ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.