சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகும் ஆவின் பால்!

Photo: Aavin Company Official Twitter Page

தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனம் ஆவின் நிறுவனம். இந்த நிறுவனம், பால் மட்டுமின்றி மோர், தயிர், பன்னீர், ஐஸ்கிரீம், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்தும், தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது ஆவின் நிறுவனம்.

மேலும், பிரிமியம் மில்க் கேக், யோகர்ட் டிரிங்க், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ், டெய்ரி ஒயிட்னர் உள்ளிட்ட புதிய பால் பொருட்களை சமீபத்தில் ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆவின் நிறுவனத்தைத் தொடர்ந்து, மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

தற்போது ஆவின் பால் பொருட்கள் சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மற்ற நாடுகளுடன் பால் பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், ஆவின் பாலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்காக, உயர்வெப்பநிலையில் பாலைப் பதப்படுத்தி, அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஆவின் நிறுவனம், “சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆவின் பால் உயர் வெப்ப நிலையில் பதப்படுத்தி (UHT Tetra pack milk) அடைக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது. இது முழுக்க முழுக்கு நவீன முறை ஆகும். இந்த முறையில் தயாரிக்கப்படும் பால் சுமார் ஒரு வாரத்திற்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றன.

சிங்கப்பூரைத் தொடர்ந்து, ஆவின் பால் பொருட்கள் ஏற்றுமதியாகும் மற்ற நாடுகளுக்கும், ஆவின் பாலை ஏற்றுமதி செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது ஆவின் நிறுவனம்.

இனி சிங்கப்பூரிலும் ஆவின் பால் கிடைக்கும் என்பதால், அங்குள்ள தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.