வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க 75 கூடுதல் விமானங்கள் – விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்

அமெரிக்காவிலும் கனடாவிலும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக கூடுதலாக 75 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவுக்கு வர முடியாமல் வெளி நாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர வந்தே பாரத் மிஷன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் கடந்த மாதம் 7ம் தேதி முதல் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் மத்திய அரசு அழைத்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது வரை 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பியுள்ளதாக விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மூன்றாம் கட்டமாக அமெரிக்காவிலும் கனடாவிலும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக 75 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து வருகிற ஜூன் 11ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை அமெரிக்காவின் நியூயார்க், நெவார்க், சிகாகோ, வாஷிங்டன் மற்றும் கனடா ஆகிய இடங்களில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர 75 விமானங்கள் இயக்கப்படும் என விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.